மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக எமது நாட்டில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் வெறும் அரசியல் உள்நோக்கங்களின் அடிப்படையிலானதாகும். இது இன, மதங்களுக்கிடையிலான பிளவை ஏற்படுத்தும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் விளக்கமளிப்பதற்கு தமக்கான சந்தர்ப்பமொன்றினை வழங்குமாறும் அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரோஹிங்ய முஸ்லீம்களின் விவகாரம் தொடர்பில் இலங்கையிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயமானது எமது நாட்டிற்கு நேரடியான தாக்கத்தினை செலுத்தாவிடினும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் நியாயமான கொள்கைகளை வகுப்பது அவசியமாகும்.
பல்வேறு அரசியல் உள்நோக்கங்கள் அடிப்படையில் மியன்மார் ரோகிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக எமது நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போராட்டங்களின் வாயிலாக சமூகத்தில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலுமான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதானது பெரும் கவலைக்குரியதொன்றாகும்.
எனவே, இந்த விடயத்தில் உரிய கொள்கையினை நாட்டில் அவசரமாக உருவாக்காவிடில் பாரதூரமான எதிர்விளைவுகளை நாட்டில் ஏற்படுத்திவிடக்கூடும். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் தங்களிடம் விளக்கமளிப்பதற்கு எமது அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தலைமையிலான குழுவினர் தயாரகவுள்ளனர். எங்களுக்கு தங்களை நேரடியாக சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு வேண்டுகிறோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகேவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.