Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

இலங்கை முஸ்லிம்களுக்கு மிக அதிகமான தொல்லைகளை வழங்கியவர், வழங்கிக் கொண்டிருப்பவர்களில் ஞானசார தேரர் முதன்மையானவர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்துமில்லை. இருந்த போதிலும் அண்மை காலமாக வேறு சிலர் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்ற போதும் ஞானசார தேரர் மிக அமைதியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவர் அப்படியே இருந்துவிட்டால் எமக்கும் சந்தோசம் தான்.

அவர் அண்மையில் ஜப்பான் சென்ற விடயமானது பல தரப்பாலும் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டது. நீதி அமைச்சிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டதால் பயந்து ஓடிவிட்டதாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. யாராவது ஒருவர் தன்மானத்தை கேள்விக்குட்படுத்துகின்ற போது, மிகக் கடுமையான கோபம் எழும். எதனை இழந்தாலும் நாம் பயப்படப் போவதில்லை என்ற கொடிய சிந்தனை எழும். இந்த சிந்தனைகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்த கூடியவை.

அது மாத்திரமல்ல உண்மையில் முன்னாள் நீதி அமைச்சரின் கீழ் ஞானசார தேரர் இருந்திருந்தால், விஜயதாஸ ராஜபக்ஸ தன்னை குற்றமற்றவர் என காட்ட, ஞானசார தேரருக்கு கட்டளை இட்டு, மீண்டும் முன்னர் போன்ற செயற்பாடுகளை அரங்கேற்ற நிர்ப்பந்திக்கப்படுவார். நான் இல்லாத போதும், அவர் தனது வேலைகளை செய்கின்றார் தானே என நியாயம் கற்பித்து கொள்வார். இதுவெல்லாம் நாம் நிமிர்ந்து கொண்டு துப்பும் செயல்களாக அமைந்து விடும்.

அண்மைக் காலமாக மிகவும் அமைதியை பேணியவர், மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டதால் தான் என்னவோ, அவர் மீண்டும் எதற்கும் அஞ்சாமல் றோகிங்கியா அகதிகள் தொடர்பில் கருத்துக்கள் வெளியிட வருவார் என அவர்கள் அமைப்பு கூறியுள்ளது. எமது விமர்சனங்கள் உனக்கு தைரியம் இருந்தால் வா என்ற வகையில் தானே அமைந்துள்ளது.

அவர் பயப்படுவது மகிழ்ச்சியான விடயம். ஆனால், நாம் அதனை கொண்டாடுவதில் எந்த பயனும் கிட்டப் போவதில்லை. எமது அனைத்து செயற்பாடுகளும் அவரை வம்புக்கு இழுப்பதாக அமையாது, அவரை தண்டிக்க வேண்டும் என்ற கோணத்தில் அமைந்து, அவரை அச்சுறுத்துவதாக அமைதல் வேண்டும். எமது சிறிய செயற்பாடுகள் பாரிய விளைவுகளை கொண்டு வந்துவிடவல்லது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *