(பிறவ்ஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாம் ஏற்பாடு செய்த “தோப்பாகிய தனிமரம்” அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வு பொத்துவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எஸ்.எச். ஆதம்பாவா மௌலவி, மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் மர்ஹூம் அஷ்ரஃபுடன் இருந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
மர்ஹூம் அஷ்ரஃபுக்கு அல்குர்ஆன் ஒதுவது என்பது மிகவும் பிடித்தமான விடயம். அதனைக் கொண்டாடும் வகையில், அஷ்ரஃபின் 16ஆவது ஞாபகார்த்த தினத்தில் கடந்தவருடம் “அழகிய தொனியில் அல்குர்ஆன்” எனும் தலைப்பில் பிரமாண்ட அல்குர்ஆன் ஓதும் போட்டியை நடாத்தியது.
அதுபோல இவ்வருடமும் அஷ்ரஃபின் ஞாபகார்த்த தினத்தில் சர்வதேச அல்குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்து. எனினும், தவிர்க்கமுடியாத காரணங்களால் அந்த மாநாடு பிற்போடப்படுள்ளது.
இதனால், கடந்த வருடம் நடைபெற்ற “அழகிய தொனியில் அல்குர்ஆன்” போட்டியில் வெற்றிபெற்றவர்களின் கிராஅத் மீள் அரங்கேற்றத்துடன் அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நினைவு நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் பொத்துவில் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.