(அப்துல் ஹமீட்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்குள் இருக்கின்ற பீத்தல்களை பற்றி முழு நாடும் விமர்சிக்கின்ற இக்காலகட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து பேசுவது வேடிக்ககையான விடயமாகுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் எம். வஹாப் தெரிவித்தார்.
அண்மையில் மூதூரில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கட்சிப் பிரச்சிணைகளை மாநாடுகளில் பேசி எதனைச் சாதிக்க முடியுமென மு.கா தலைவரை விமர்சித்து பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுத்தினுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
இவ்வாறு மு.காவைப்பற்றி விமர்சிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எந்த அருகதையும் கிடையாது. மு.கா பிழையாக வழிநடாத்தப்படுகிறது என ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கட்சி ஆரம்பித்த ரிஷாட் பதியுதீனின் செயற்பாடுகள் மு.காவையும் மிஞ்சிவிட்டது. மு.கா கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் யாவும் அ.இ.ம.கா கட்சிக்குள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவரது கட்சிக்குள் நடைபெறுகின்ற சதி நடவடிக்கைகள் தொடர்பாக எவருடைய பெயர்களும் குறிப்பிடாமல் மறைமுகமாகப் பேசிய விடயங்களை பிழை என்று அமைச்சர் ரிஷாட் கூறுவது வேடிக்கையானது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய தவிசாளர், செயலாளர் ஆகியோர்களுக்கும் அக்கட்சியினுடைய தலைவருக்குமிடையில் சில மாதங்களாக ஒரு முறுகல் நிலை இருக்குதென்பது ஊடகங்களில் வெளிவந்த ஒரு பரகசியமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் அக்கட்சியினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் மறைமுகமாக சாடிப்பேசிய விடயங்களை பிழை என்று கூறத்தெரிந்த நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடட்சியை உருவாக்கி வளர்த்து உங்களை கட்சியின் தலைவராக உத்தியோகபூர்வமாக நியமித்த ஒருவரை தேர்தலிலும் போட்டியிடாமல் தடுத்து தேசியல் பட்டியல் வழங்குவேன் என சத்தியம் செய்து பின்னர் நயவஞ்சகத்தனமாக ஏமாற்றினீர்கள்.
அது மட்டுமல்லாமல் அவ்வாறான ஏமாற்றத்துக்கு மத்தியிலும் அவர் அமைதியாக இருந்தபோது யாரோ விலாசம் தெரியாத ஒருவரின் முகநூலில் உங்களின் உத்தரவின் பெயரிலோ அல்லது உங்களுக்குத் தெரியாமலோ உங்களின் போலி முகநூல் அடியாட்களில் ஒருவரால் எழுதப்பட்ட ஒருசெய்தியை வைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஊடகவியாளர் மாநாட்டைக்கூட்டி கட்சியிலிருந்து இடைநிறுத்த உங்களுக்கே அதிகாரம் இல்லாத போதும் அவ்வாறு இடைநிறுத்தியதாக பகிரங்கமாக அறிவித்து கட்சியின் உள்வீட்டு விவகாரத்தை சந்திக்கு கொண்டு வந்தீர்களே அது நியாயமா?
தேசியப்பட்டியல் விவகாரத்தில் நயவஞ்சகத்தனமாக ஏமாற்றி அநியாயம் செய்தது நீங்களே, அதே நேரம் உங்களால் பாதிக்கப்பட்டவர் நீங்கள் இன்று தேசியத் தலைவராக உங்களுக்கு நீங்களே மகுடம் சூடுவதற்கும்; ஒரு முழு அமைச்சராகவிருப்பதற்கும் வழிசமைத்தவர் எனும் நன்றியை மறந்து இன்று அவரை அவமானப்படுத்தி விட்டீர்களே, இதற்குரிய கூலியை எப்போதாவது நீங்கள் பெற்றாக வேண்டும். குறிப்பாக கட்சியின் தலைவரான உங்களால் சுயநலமாக எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி இன்று நீதிமன்றம் சென்று சந்தி சிறிக்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதே ஆகவே அடுத்த கட்சியைப் பற்றிப் பேசுவதற்கு உங்குளுக்கு என்ன அருகதை இருக்கின்றது எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
நீங்கள்; மூதூரில் பேசும்போது நாம் வாக்குறுதியளித்தால் அவ்வாக்குறுதியிலிருந்து மாறமாட்டோம் சொன்னதைச் செய்வோம் என்று நாக்கூசாமல் பேசியிருக்கின்றீர்கள் உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகின்றேன் நீங்கள் அம்பாரை மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?
தேசியப்பட்டியலை அம்பாரைக்கு வழங்குவேன் என தேசிய ஊடகங்களிலும் பொது மேடைகளிலும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த நீங்கள் அதனை நிறைவேற்றினீர்களா? புத்தளத்துக்கு தேசியப்பட்டியல் வழங்குவேன் என்று எங்கேயாவது பகிரங்கமாக கூறினீர்களா? அவ்வாறு பகிரங்கமாக கூறவில்லை என்றால் இரகசியமாகவா அந்த வாக்குறுதியை வழங்கினீர்கள் அவ்வாறு இரகசியமாக வாக்குறுதி வழங்கியிருந்தால் அம்பாரை மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்காகவா நயவஞ்சகத்தனமாக வாக்குறுதியளித்தீர்கள். இவ்வாறு நயவஞ்சகமாக செயற்படும் நீங்கள் எவ்வாறு அடுத்தவன் கட்சியைப் பற்றிப்பேச முடியும்.
நீங்கள் சொல்வதனைச் செய்பவன் என உங்களின் நேர்மையைப் பற்றிப் பேசி வருகின்றீர்கள் கடந்த பொதுத் தேர்தலின் போது சம்மாந்துறையில் பேசும்போது மு.காவை விட ஒரு ஆசனம் குறைவாக எடுத்தாலும் தலைமைப்பதவியை இராஜினமாச் செய்வேன் என அம்மக்கள் மத்தியில் பேசினீர்களா? இல்லையா? சொன்னதைச் செய்வேன் என உறக்கக்கூறும் நீங்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? அல்லது நீங்கள் இந்த உலகத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி உங்களது அரசியலை முன்னெடுக்கப்போகின்றீர்களா? இவைகளுக்கு உங்களால் பதில் வழங்குவதற்கு முடியுமா எனக்கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
மாறாக உங்கள் தலைமைப் பதவியை பாதுகாத்துக் கொள்ள தலைவர் பதவியை தந்த செயலாளர் நாயகத்தையே வெளியில் போட முற்பட்டுவிட்டீர்களே, உங்களின் பிழையான போக்குகளினாலே இன்று நீதிமன்றில் நீங்கள் கைகட்டி நிற்கின்றீர்கள் நீங்கள் செய்த துரோகங்களை எண்ணி வருத்தப்படும் காலம் மிக தூரத்திலில்லை அகங்காரம் மற்றும் அதிகார வெறிபிடித்து ஆடியவர்களின் நிலைமையைப் பற்றி சற்று எண்ணிப்பாருங்கள் நீங்கள் வாக்குறுதியளித்து சாட்டுப்போக்குகளை கூறி மக்களை ஏமாற்றினாலும் இறைவனிடத்தில் எவ்வாறு தப்பித்துக்கொள்ளப் போகிறீர்கள்.
எனவே சொல்லுவதைச் செய்கின்ற பழக்கமே இல்லாத நீங்கள் நான் சொல்லுவதனைச் செய்கின்றவன் என்று தைரியமாகக் கூறுகின்றீர்களே உங்களின் மனச்சாட்சி உறுத்தவில்லையா? மக்களை மடையர்களாக்கும் இந்த அரசியல் 21ஆம் நூற்றாண்டில் கல்வி கற்ற சமூதாயத்திற்கு மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் .
அத்தோடு, எதிர்காலத்தில் எப்படி நம்பிக்கையாக உங்களோடு அரசியல் பயணத்தை முன்னெடுப்பது பற்றி ஏறாவூர் மக்கள் சிக்கித் தவிக்கின்ற துன்பகரமான செய்தியையும் எத்திவைக்க விரும்புகின்றேன் என்றார்.