பாகிஸ்தானில் தேசிய மதமான இஸ்லாம், இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மத்தத்தை வளர்த்த முஹம்மது நபி போன்றவற்றுக்கு எதிராக துவேஷமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாம் மதத்தையும், முஹம்மது நபியையும் அவமதிக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பிரசாரம் செய்ததாக லாகூர் அருகேயுள்ள குஜராத் நகரை சேர்ந்த நடீம் ஜேம்ஸ்(35) என்பவர் மீது இங்குள்ள கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக ஜேம்சின் வக்கீல் ரியாஸ் அஞ்சும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மத அவமதிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மா தஸீர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு அவரது மெய்க்காப்பாளரால் கொல்லப்பட்டார். கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து மது துவேஷத்தை காரணமாக வைத்து 67 பேர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது