(அஸ்லம்.எஸ்.மௌலானா)
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றபோதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு கச்சேரியினால் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியில் அமைந்திருப்பதால் அரச அலுவலர்களும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தேசிய முஸ்லிம் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன உட்பட தமிழ், முஸ்லிம் அமைச்சர்களுக்கு தேசிய முஸ்லிம் கவுன்ஸில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“வடக்கு- கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி தமிழ் என அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் அம்பாறை மாவட்ட கச்சேரி அதனை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் இப்பகுதி மக்கள் மீது சிங்கள மொழி திணிப்பை முன்னெடுத்து வருகிறது.
இதனால் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் அரச அலுவலர்களும் பொது மக்களும் கச்சேரியுடனான தொடர்பாடல்களின்போது கடுமையாக திண்டாடி வருகின்றனர்.
எந்தவொரு அரச நிறுவனமும் தமிழ் மொழி மூலமான அரச அலுவலகங்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்களை அனுப்ப வேண்டியேற்பட்டால் அதனுடன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் தமிழ் மொழியில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழ் மொழியிலேயே பதில் அனுப்ப வேண்டும் எனவும் பொது நிர்வாக அமைச்சு, சுற்றுநிருபம் மூலம் பணித்திருக்கின்றபோதிலும் அம்பாறை மாவட்ட கச்சேரி அதனையும் மீறி செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இந்த மாவட்டத்தில் 65 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் 13 தமிழ் மொழி மூல பிரதேச செயலகங்களும் 35 வீதமான சிங்களம் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் 07 சிங்கள மொழி மூலமான பிரதேச செயலகங்களும் இயங்கி வருகின்றன. இந்த அடிப்படையில் நோக்கும்போது மாவட்ட கச்சேரியானது இங்கு பெரும்பாண்மையாக வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு மொழி ரீதியில் பாரிய அநியாயத்தை மேற்கொண்டு வருவதை புரிந்து கொள்ள முடியும்.
காலா காலமாக இருந்து வருகின்ற இப்பிரச்சினைக்கு நல்லாட்சியிலும் தீர்வு கிடைக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகையினால் இதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.