துருக்கி நாட்டிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி, தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். அப்படி அவர்கள் எங்கேயெல்லாம் பதுங்கி இருக்கிறார்கள் என்று தகவல் கிடைக்கிறதோ, அங்கேயெல்லாம் போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
அப்படி சமீப காலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை துருக்கி போலீஸ் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் வெளிநாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 290 பேரை 95-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாடு கடத்தி உள்ளனர்.
மேலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 38 ஆயிரத்து 269 பேருக்கு துருக்கியில் நுழைய அந்த நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் துறைமுக நகரான இஸ்தான்புல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை தேடும் வேட்டையை போலீசார் நடத்தி உள்ளனர். இந்த வேட்டையின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் 25 பேரை அவர்கள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.