மாகாண சபையின் சம்பிரதாயங்களை மீறி ஜனநாயக விரோதமான முறையிலேயே 20 ஆவது திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் வெள்ளைத்தாள் ஒன்றைக் காண்பித்து முதலமைச்சர் அனைவரையும் ஏமாற்றிவிட்டதாகவும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டினார்.
நேற்றைய தினம் -11- கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் அதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக நாம் கேள்வியெழுப்பியபோது ஒரு வெள்ளைத் தாள் காண்பிக்கப்பட்டது. அது சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதியே அதுவாகும். இந்த ஆவணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை நம்பியே இந்த வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள்விடுத்தார்.
இப்பின்னணியிலேயே குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மாகாண சபைக்கு மேலும் அதிகாரம் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முதலமைச்சர் காண்பித்த வெள்ளைத் தாளை நம்பி அதற்கு வாக்களிப்பார்கள் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
தமிழ் பேசும் மக்களைக் கொண்டே தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கின்ற செயற்பாட்டுக்கு அனைவரும் துணைபோயுள்ளார்கள். இது ஒரு சட்டவிரோதமான வாக்கெடுப்பாகும். இதில் அவர்கள் வெற்றி பெற்றதாக கூறினாலும் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இது தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.
இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி நாம் யோசிக்கிறோம்.