(பர்சான் அட்டாளைச்சேனை)
கிழக்கு மாகாணத்தில் பல பிரதேச பிரிவுகளிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். அப்பகுதிகளில் காணியற்றோருக்கு அரச காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கான காணிகள் இல்லை. தற்போதையை காணி பங்கீடு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்குவதற்கான சலுகைகளோ உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான வசதிகளோ இல்லை. இது அவர்களது அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாக உள்ளதால் வெற்றுக் காணிகள் உள்ள அண்மிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து காணியில்லாத முஸ்லிம்களுக்கு காணிகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணிச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைச் சமர்பித்தார்.
அதற்குப் பாதிலளித்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரேரணையைச் சமர்பித்த சல்மானுக்கு நன்றி கூறியதோடு இது பற்றி அரசின் கவனம் உடனடியாக செலுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் உரையாற்றும்போது,
தற்போது எமது மக்கள் தொகை 23 மில்லியன்கள். அன்று அது 16 மில்லியன்களாக இருந்தது நாம் அன்று காணி உரிமைச்சட்டத்தை கொண்டு வந்தபோது மக்கள் தொகை வெறும் 5 மில்லியனாகவே இருந்தது ஒருவருக்கு 3 ஏக்கர் நிலத்தை நாம் வழங்கினோம். இன்று இது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. காணியற்றோருக்கு அவர்கள் வாழும் பிரதேசத்திலேயே காணிகளைக் கொடுக்கும் வசதி இல்லாமல் உள்ளது. நாட்டின் கொள்கையோ குறித்த பிரதேச செயலகத்திலிருந்தே காணி கொடுபட வேண்டும் என்பதாகும். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது மக்களின் விவசாயத்திற்கு காணிகள் தேவை. வீடுகட்ட காணிகள் தேவை. கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு நகரில் காணி பற்றாக்குறை காரணமாக மாடிவீட்டுத் திட்டங்களை அமுல் செய்கின்றோம். கிராமப் புறங்களிலும் இப்பிரச்சினை உள்ளது ஒரு தனி மனிதனுக்கு ஒரு ஏக்கர் காணி கூட இல்லை. எனவே சல்மானின் பிரேரணையை அரசு பரிசீலனை செய்வது அவசியமாகும். காணியற்றோருக்கு காணி வழங்கும் கொள்கை என்ன மாடி வீடுகளை கிராமப்புறங்களிலும் அமைக்க முடியுமா என்பதையெல்லாம் ஆலோசனை செய்து பார்த்தல் அவசியமாகும். அரசுக்கு சொந்தமான எல்லா காணிகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு மூலம் இலகுவாக காணிகளை இனங்காணவும் முகாமைத்துவம் செய்யவும், பலனளிக்கக் கூடியவாறு அவற்றை உபயோகிப்பதற்கும் ஏதுவாக அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி 2 மில்லியன் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் வரையப்படும். அதன் மூலம் காணியற்றோருக்கும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்றோருக்கும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சேவையாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.