Breaking
Mon. Nov 25th, 2024
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

சட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரசன்னமாகியிருந்தார்.

கடந்த 2015 ஒக்டொபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26 ஆவது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு மாற்றத்தின் பிரகாரம் அப்போது செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த எம்.ரி.ஹசன் அலி, பதவியிழந்த அதேவேளை கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கட்சியின் 27
ஆவது பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் தற்காலிக செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த ஏற்பாட்டின் பிரகாரமே கட்சியின் புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் இரு வருட காலமாக கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கடந்த 13 வருடங்களாக கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த அதேவேளை சர்வ கட்சி மாநாடுகள் மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான உயர்மட்ட கூட்டங்களில் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தியபோது கட்சியின் முதலாவது இணைப்பு செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *