Breaking
Sun. Nov 24th, 2024

(பி.எம். முஜீபுர் ரஹ்மான்)

1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா) பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சுமார் 75,000 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இம்மக்கள் புத்தளம், அனுராதபுரம், குருனாகல், நீர்கொழும்பு, பாணந்துறை, திஹாரிய, ஹுனுபிட்டிய போன்ற இடங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்காலிக குடியிருப்புக்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மீள்குடியேறியுள்ளார்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, முப்பது வருடங்களாக நடைபெற்றுவந்த இனவாத யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன் பின்னர், விடுதலைப் புலிகளால் ஆயதமுனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களது தாயகத்திற்கு, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமிக்குத் திரும்பினர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களில் ஒரு பகுதியினரே மன்னார் மாவட்ட முஸ்லிம்கள். மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியே முசலிப் பிரதேசம். முசலிப் பிரதேசம் தெற்கே மோதரகம ஆற்றையும் (உப்பாறு), கிழக்கே அனுராதபுர மாவட்டத்தையும், வடக்கே மல்வத்து ஓயாவையும் (அருவியாறு), மேற்கே இந்து சமுத்திரத்தையும் கொண்டது. இது சுமார் 487 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டதாகும்.

இப்பிரதேசத்தில் மொத்தம் 20 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றில், மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குளம் என்பன தென்பகுதி கிராம சேவகர் பிரிவுகளாகும். கொண்டச்சி, அகத்திமுறிப்பு, வேப்பங்குளம் ஆகிய கிராமங்கள் முசலிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.

அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. ஆனால், இவ்வர்த்தமானி அறிவித்தல் ஒட்டுமொத்த முசலிப் பிரதேசத்தையும் பாதிப்படையச் செய்கின்றது.

1990 ஆம் ஆண்டு புலிகளின் பலவந்த வெளியேற்றத்தின்போது மேற்கூறிய கிராமங்களில் சுமார் 180 – 250 இற்கும் இடைப்பட்ட குடும்பங்களே வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது இப்பிரதேசத்திலிருந்து சுமார் 3800 குடும்பங்களுக்கும் அதிகமானோர் வெளியேறப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்டு 27 வருடங்களின் பின்னர் தற்போது இவர்களது சனத்தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஜூலை 2017 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினால் எடுக்கப்பட்ட சனத்தொகை விபரம்

Ser
NO G.N,Division Total Approximately To be resettle
Family Members Family (my research)
1 Kokkupadayan 168 537 11
2 Chilawathurai 629 2402 307
3 Koolankulam 575 1986 114
4 Saveriyarpuram 281 1023 15
5 Arippu West 325 1207 26
6 Arippu East 251 745 22
7 Pandaraveli 415 1596 206
8 Methanveli 187 699 79
9 Puthuveli 229 815 96
10 Poonochikulam 340 1365 102
11 Ahathimurippu 491 2010 168
12 P.P.Potkerny 323 1166 179
13 S.P.Potkerny 378 1397 148
14 Veppankulam 795 2938 352
15 Maruthamadhu 438 1455 126
16 Kondachchi 769 2419 234
17 Karadikkuly 434 1672 247
18 Marichchikkatty 534 1988 362
19 Palaikkuly 379 1381 108
20 Malankadhu (Mullikulam) 200 671 39
Total 8141 29472 2941

ஜூலை 2017 ஆம் ஆண்டுவரை முசலி பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 8141. இன்னும் 1300 இற்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரை பதிவு செய்யாமல் புத்தளம், அனுராதபுரம் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் தற்காலிக வாழ்விடங்களில் (அகதி முகாம்களில்), உறவினர்களின் வீடுகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் அத்தியாவசியத் தேவைகளுமின்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இக் குடும்பங்களில் சுமார் 5200 குடும்பங்களே மீள்குடியேறியுள்ளனர். இம்மீள்குடியேறியுள்ள 5200 குடும்பங்களில் சுமார் 1000 குடும்பங்களுக்கு இன்னும் காணிப் பிரச்சினை மற்றும் குடியிருப்புப் பிரச்சினைள் காணப்படுகின்றன. இவர்கள் தற்போது, தங்களது விவசாயக் காணிகளை அழித்து தங்களது குடியிருப்புப் பகுதிகளை அமைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை எவ்வித விவசாயக் காணிகளும் வழங்கவில்லை.

இவைகளுக்கு அப்பால், பதிவு செய்து இன்னும் மீள்குடியேறாமல் வாழ்கின்ற சுமார் 2941 குடும்பங்களும், இன்னும் தங்களது பதிவினை மேற்கொள்ளாமல் தற்காலிக வாழ்விடங்களிலும் (அகதி முகாம்), உறவினர்களின் வீடுகளிலும் வாழ்கின்ற 1300 இற்கும் அதிகமான குடும்பங்களும் காணிப் பிரச்சினை, குடியிருப்புப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, கல்விப் பிரச்சினை என்பவற்றின் மூலம் இன்னும் மீள்குடியேறாமல் இருக்கிறார்கள்.

மேலும், யுத்தத்தின் பின்னர் 2010 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களுக்குச் சென்றபோது, 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த நிலங்கள் காடுகளாக மாறியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அத்தோடு, காடுகளாக மாறியுள்ள தங்களது சொந்த குடியிருப்பு நிலங்களில் மீள்குடியேறுவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கினர். எனவே, தங்களது குடியிருப்பு நிலங்களையும் விவசாய நிலங்களையும் துப்பரவு செய்து தருமாறு அரசாங்கத்திடம் வேண்டினர். இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் இவர்களது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை துப்பரவு செய்து கொடுத்தது.

இவ்வாறு துப்பரவு படுத்திய பகுதியையும் இவர்கள் குடியேறிய பிரதேசங்களையும் அரசாங்கம் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாவில்லு, வெப்பல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆக்கிரமித்தது. இவ்வர்த்தமானி அறிவித்தல் மூலம் இம்மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதோடு, அவர்களின் பொருளாதாரத்தையும் முடக்கியது. அத்தோடு, அவர்களை மேலும் அகதி முகாம்களிலும், ஏனைய பிரதேசங்களிலுமே தொடர்ந்தும் வாழ வைத்தது. அதன் மூலம் அகதி மக்களின் மீளத்திரும்பும் உரிமையை அரசாங்கம் பறித்துள்ளது.

எனவே, இம்மக்களின் மீளத்திரும்பும் உரிமையை உத்தரவாதப்படுத்துவதோடு, இவர்களின் வாழ்விடங்களையும் விவசாய நிலங்களையும் மீள ஒப்படைக்க வேண்டும். அத்தோடு, இவர்களின் எதிர்கால சந்ததியினருக்கான வாழ்விடங்களை இம்மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆகவே, கீழ்வரும் விடங்களை நிறைவேற்றித் தருமாறு இம்மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

1. 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்தல், என்பதே பிரதான கோரிக்கை.

நியாயபூர்வமாக பரிசீலித்து இம்மக்களுக்குரிய தேவைகள் அனைத்துக்குமான காணிகளை விடுவித்தல். அதன்போது, எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் கருத்தில் கொள்ளுதல்.

2. புத்தளம் – மன்னார் வீதியை புனரமைத்து சீரான போக்குவரத்துக்கு திறந்து விடுதல். இவ்வீதியே அகதி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பிரதானமானது. மேலும், இவ்வீதியால் தொடர்ந்து பயணிக்கும் ஏழை, அகதி பயணிகள், அங்கு வெளியாகும் தூசுகளினால் சில வகையான நோய்களுக்கும் உட்படுகின்றனர்.

3. கடந்த 27 வருடங்களாக அதிகரித்துள்ள குடும்பத்தினரின் மீள்குடியேற்றத்திற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு ஏக்கர் குடியிருப்புக் காணியும், மூன்று ஏக்கர் விவசாயக் காணிகளையும் வழங்குதல்.

இதுவரை இவர்களுக்கான விவசாயக் காணிகள் எதுவும் வழங்கவில்லை. ஆனால், பரிதாபம் இவர்களின் விவசாயக் காணிகள் குடியிருப்புக் காணிகளாக மாறிக் கொண்டு செல்கின்றன.

மறிச்சுக்கட்டி – சிலாபத்துறை பிரதான வீதியின் மேற்குப் பக்கமாக உள்ள அனைத்து காணிகளையும் மக்கள் பாவனைக்காக விடுவித்தல்.

(யுத்தத்திற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்களுக்கு இவ்வாறு காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இக்கோரிக்கை நியாயமானதே)

4. 27 வருடங்களின் பின்னர் இப்பிரதேசத்தில் மீள்குடியேறுகின்ற புதிய சந்ததியினர் விவசாயத்தை தமது தொழிலாக செய்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, இவர்களுக்கான கைத்தொழில் நிலையங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். அதற்காக, சிலாபத்துறை, கல்லாற்றுப் பகுதி, மறிச்சுக்கட்டிப் பகுதியிலுள்ள அரச காணிகளை ஒதுக்குதல்.

5. இவர்களுக்கான பாடசாலை, ஆஸ்பத்திரி, விளையாட்டு மைதானாம், வாசிகசாலை, போக்குவரத்து வாகன தரிப்பிட இடம் (Bus Deport), சந்தைகள், சிறுவர் பூங்கா, சன சமூக நிலையம், மகளீர் கிராம அபிவிருத்தி நிலையம், மையவாடி, உளவளத்துனை நிலையம், மத தளங்கள், சிறுவர்களின் மாலை நேர கற்கை நிலையம், மகப்பேற்று கிளினிக் நிலையம் என்பவற்றை அமைப்பதற்கான நிலங்களை அந்தந்த கிராமங்களுக்கு அருகாமையில் ஒதுக்கிக் கொடுத்தல்.

6. கடல் மற்றும் ஆற்று வளங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குதல். இதன்மூலம் இவர்களின் பொருளாதாரம் மேம்படும். மேலும், நன்னீர் மீன்பிடியும் அபிவிருத்தியடையும்.

மோதரகம ஆற்றில் (உப்பாறு) மீன்பிடிக்கத் தடை.

7. மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்கள் தவிர்ந்த முசலிப் பிரதேசத்தின் ஏனைய கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே தங்களது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களது சனத்தொகை வளர்ச்சி அடிப்படையில், அவர்களது விவசாய நிலங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி வருகின்றனர்.

இந்நடவடிக்கையினால் எதிர்காலங்களில் இவர்கள் விவசாய தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, இவர்களுக்கான குடியிருப்பு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களையும் முசலிப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் ஒதுக்கிக் கொடுத்தல்.

8. இப்பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களது குடியிருப்புக் காணிகளை (சிலாபத்துறை, முள்ளிக்குளம், கொக்குபடையான்) உடனடியாக மக்களிடம் ஒப்படைத்தல்.

9. அத்தோடு, நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மக்களின் காணிகளுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்குதல். பாதுகாப்புப் படையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அவர்களின் தளங்களை அமைத்து, மக்களது காணிகளை விடுவித்தல்.

10. விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தல். இதற்காக சிறந்த நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்.

அத்தோடு, மீனவர்களின் அடிப்படைத் தேவைகளான பாடு அமைத்தல், சிலாபத்துறையில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல். (மீன்பிடித் துறைமுகத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இன்னுமொரு இடத்தில் கடற்படையினருக்கென அல்லிராணிக் கோட்டைக்கு அருகாமையில் தனியாக காணி ஒதுக்கப்பட்டுள்ளது)
குறிப்பு – நிலைமாற்று காலம் என்பதால் தகவல்களைப் பெறுவதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

இப்படிக்கு

முசலி சிவில் சமூகங்கள் சார்பாக
பி.எம். முஜீபுர் ரஹ்மான் (0772208774)
மனித உரிமை செயற்பாட்டாளர், பத்திரிகையாளர்
கூளாங்குளம், சிலாபத்துறை,
மன்னார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *