(அனா)
ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாக எதிர்ப்பு பேரணி இடம் பெற்றது.
கல்குடா ஜம்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
கல்குடா ஜம்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் கல்குடா முஸ்லீம் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள், சமுக சேவை அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன ஒன்றினைந்து இவ் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.
நமது காலத்தின் மிகப் பெரும் மனித அவலமாகும். சர்வதேச சட்டங்கள் அத்தனையையும் மீறி றோஹிங்கிய மக்களின் இன அடையாளத்தை மறுத்து அவர்களைக் கொன்றொழிக்கும் மியன்மார் அரசாங்கத்தைக் கண்டிப்பதோடு, அதற்குத் துணை நிற்கும் மியன்மார் அரசாங்கமும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இம்மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐ.நா சபையும் சர்வதேச சமூகமும் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.