உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது கலப்பு முறையில் அதாவது, 60 வீதம் தொகுதிவாரி முறையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளதோடு பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் உள்ளுராட்சி அதிகார விசேட ஒழுங்குகள் சட்டம் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகிய உத்தேச பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும் 2012ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஷவின் தலையீடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் வகையில் அது அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியதும் மீண்டும் எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டது.
அக்குழுவானது எல்லை நிர்ணயத்தினை வகுப்பதற்கான பணியினை ஒருவருடகாலமாக மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணய அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. ஏனினும் தொடர்ச்சியாக இழுபறிகள் இடம்பெற்று வந்தன.
குறிப்பாக தொகுதிவாரி முறைமை, விகிதாசார முறைமை ஆகியவற்றுக்கான சதவீதங்கள்,பெண்களுக்கான ஒதுக்கீட்டுச் சதவீதங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்திருந்தன.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது குறிப்பாக சிறு,சிறுபான்மை அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து தரப்புக்களுக்கிடையிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இவ்வறான நிலையிலேயே மேற்குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.