மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது தலை மன்னார் தொடக்கம், முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மறிச்சிக்கட்டி வரையும், விடத்தல் தீவு தொடக்கம் மடு வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினர் தங்குவதற்கு சுமார் 400 அறைகளை உள்ளடக்கிய சுற்றுலா விடுதிகளை அமைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்ற இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பறவைகளை சுற்றுலாத்துறையினர் பார்வையிடுவதற்கு ஏற்ற வகையில் அந்த பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமாக மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களையும் மேம்படுத்துவது தொடர்பில் குறித்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் உட்பட ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.