வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் சில கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் வேலைநிறுத்தத்தை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
TA/G/PSM/13/2016 ஆம் இலக்க 02.06.2017 ஆம் திகதிய சுற்றுநிருபம் மூலம் வெளியிடப்பட்ட புதிய மேலதிக நேரக் கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவின் நிலுவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை, மற்றும் தாதிய உத்தியோகத்தர்களது பதவி உயர்வின் போதான மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவையை வழங்காமை போன்ற கோரிக்கையை முன்வைத்தே வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்களது கொடுப்பனவு சம்பந்தமான மற்றும் ஏனைய விடயங்களிலும் நடைமுறைப்படுத்தலில் தோல்வியடைந்த மாகாணமாக வடமாகாணமே உள்ளது. என்பதனை தங்களுக்கு தெரிவிப்பதோடு இது வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களது தொழில்துறையை கடுமையாக பாதிக்கின்ற செயற்பாடாகவே உள்ளது.
இவ் ஒருநாள் வேலை நிறுத்தமானது 29.08.2017 மு.ப 7.00 தொடக்கம் 30.08.2017 மு.ப வரை நடைபெறும் என்பதனையும் நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மைகருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைக்கான அவசரசிகிச்சைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
இவ் வேலை நிறுத்தத்தால் நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும் வடமாகாணசபை நிர்வாகமுமே முழுமையான பொறுப்பு என்பதனையும் அறியத்தருவதாக மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.