நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரி இருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்ததன் மூலம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பொறுப்புக்களை மீறியுள்ளாரென்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரது அமைச்சுப் பதவிகளை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் நேற்றுக் காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதி தனது தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளார்.