Breaking
Mon. Nov 25th, 2024
ஆர்.ஹஸன்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் – பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் இணைத்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக என்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக இதன்போது குற்றம்சாட்டிய இராஜாங்க அமைச்சர், கலைக்கபட்டுள்ள காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நாங்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் அதன் நினைவுக் கல்வெட்டு கழற்றி எரியப்பட்டு மீண்டும் புதிய நினைவுக் கல்வெட்டு நடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

மத்திய அரசு மற்றும் எனது தனிப்பட்ட நிதிப் பங்களிப்பு ; ஒதுக்கீட்டில் நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் ஊர் பேர் தெரியாதவர்கள் எல்லாம் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், எனது பங்களிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழாவில் எனக்கே அழைப்பிதழ் இல்லை. அழைப்பிதழில் குறித்த ஊரின் பிரதிநிதியாக எனக்கு வழங்க வேண்டிய மரியாதையும் வழங்கப்படவில்லை. அத்துடன், குறித்த அபிவிருத்திப்பணியை நான் செய்ததாக நினைவுக் கல்வெட்டில் எனது பெயர் இடம்பெறவும் இல்லை.

எனவே, இவ்வாறான காரணங்களால் பிரதமர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை எமது மத்திய குழு எடுத்துள்ளது. அதற்கமைய நான் எனது சொந்த ஊரில் நடக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

எனது சொந்த ஊரில் நடைபெறும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நான் கலந்து கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்கள் ஏற்பட்டு விடும். எனவே, நான் இந்நிகழ்வை புறக்கணிப்பதற்கான காரணம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
எனது முழுமையான நிதிப்பங்களிப்புடன் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்திப் பணிகள் வேறு தரப்பினரால் திறந்து வைக்கப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக காத்தான்குடி நகர சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் மீண்டும் காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நாங்கள் கைப்பற்றுவோம். அதன் பின்னர் எனது பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டு வேறு தரப்பால் திறந்து வைக்கவுள்ள காத்தான்குடி நகர சபையின் நினைவுக் கல்வெட்டை நாங்கள் கழற்றி எரிந்து வேறு ஒரு நினைவுக் கல்வெட்டை நடுவோம். அதுமட்டுமல்லாது, கிழக்கு முதல்வர் உள்ளிட்ட அவரது சகாக்கள் திறந்து வைத்த எனது நிதிப்பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தினதும் நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்.

இதேவேளை, காத்தான்கு நகர சபையின் திறப்பு விழா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மட்டு. விஜயம் சம்பந்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை இம்மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் பிரதமருடன் கலந்துரையாடினர். பின்னர், பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியிலும் உரையாடினார். இதன் காரணமாகவே பிரதமர் தனது விஜயத்தை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வருகைத் தருவதாக அறிவித்தாலும் முன்னர் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் அச்சிட்ட அழைப்பிதழையே முதல்வர் மீண்டும் விநியோகம் செய்துள்ளார். அவருடன்; இது சம்பந்தமாக பேசி பயனில்லை என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாது தவிர்ந்து கொள்ள தீர்மானித்தோம்.

இந்த அபிவிருத்திப் பணியை செய்தவன் என்ற அடிப்படையில் எனக்கு அழைப்பிதழ் வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் நான் இந்த மாவட்டத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றோ, அரசில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலோ, மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் என்பதாலோ அல்லது காத்தான்குடி மக்களின் நீண்டகால பிரதிநிதி என்ற அடிப்படையிலோ எனக்கு அழைப்பிதழ் வழங்கியிருக்க வேண்டும்.

காத்தான்குடி நகர சபை நிர்மாணப் பணிக்கு முழுமையான நிதிப் பங்களிப்பு மத்திய அரசினாலே பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தப் பணிக்கும் கிழக்கு மாகாண சபைக்கோ அல்லது கிழக்கு மாகாண முதலமைச்சருக்கோ எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் ஒரு ரூபாய் கூட இதற்காக வழங்கவில்லை.

காத்தான்குடி நகர சபையில் உள்ள நிதியைப் பயன்படுத்தியே திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் செய்கின்றனர். அந்த நிதியை தேவையற்ற விதத்தில் வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். எனினும், நாங்கள் நகர சபையின் நிதியை எமது சொந்த தேவைகளுக்காவோ – அரசியல் தேவைகளுக்காவோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. நாங்கள் எமது சொந்த நிதியைப் பயன்படுத்தியே  நகர சபையின் தேவைகளை நிவர்த்தி செய்து நகர சபையின் நிதியை சேமித்தோம். அவசர தேவைகள், அனர்த்தம் ஏதும் ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்துவதற்காகவே அந்த நிதி சேமிக்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளது – என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *