மட்டக்களப்பு விகாராதிபதியின் செயல் வரவேற்புக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மீராவோடை பாடசாலை ஒன்றின் காணி சம்பந்தமான பிரச்சினைகளை பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.
இதனை விடுத்து ஆடு நனைகின்றது என அழும் ஓநாயின் செயலை நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் வரவேற்றுள்ளமை பௌத்த சமயத்தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட முடியும் என்ற அங்கீகாரத்தை அளித்தது போன்றதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் இக்கால சூழ்நிலையில் ஆங்காங்கு இடம் பெறும் சம்பவங்களுக்காக தமிழ் மக்கள் மீது பாசத்தை காட்டுவது போன்றும் அவர்களுக்காக களத்தில் குதிப்பது போன்றும் சில பௌத்த சமயத்தலைவர்களின் செயற்பாட்டின் சூட்சுமத்தை கிழக்கு தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை என்னவென்று செல்லமுடியாதுள்ளது.
இவ்வாறான சட்டத்தை மீறிய செயற்பாடுகளை தமிழர்கள் வரவேற்றால் நாளை தமிழ் பகுதிகளுக்குள் சிலை மற்றும் அத்துமீறல் போன்றவற்றை இவர்களே கொண்டு வந்தால் எந்த முகத்துடன் இவர்களை கண்டிக்கப்போகிறார்கள்?
சட்டத்தை நாட்டின் எந்தவொரு தனிநபரும் கையில் எடுப்பதை உலமா கட்சி அனுமதிக்காது. இவ்வாறுதான் மஹிந்த காலத்திலும் சிலர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டனர்.
அதனைக்கண்டித்து ஆட்சியை மாற்ற துணை போனவர்கள் இன்று முஸ்லிம்களையும் தமிழர்களையும் சீண்டி விடுவதற்காக சட்டத்தை கையில் எடுப்போரை பாராட்டுவது நல்ல செயலாகத் தெரியவில்லை.
இதே சுமண தேரர் தமிழ் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசியபோது எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் இச்செயலுக்காக அவரை பாராட்டவில்லை.
நாட்டில் சமாதானத்தையும், சகல இனங்களையும் நேசிக்கும் பல நல்ல பௌத்த தேரர்கள் இருக்கின்றனர்.
அதே போல் சிங்கள பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் சமயத்தலைவர்களும் உண்டு.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் சுமண தேரரின் சட்டத்தை கையில் எடுத்த செயலை பாராட்டும் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் தனது கருத்தை பகிரங்கமாக அவர் வாபஸ் பெற வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என அதன் தலைவர் மிகப் பகிரங்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.