பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் அந்த உத்தரவை எதிர்த்து மூன்று மேல் முறையீட்டு மனுக்களை இன்று தாக்கல் செய்தார்.
நவாஸ் ஷெரீப் சார்பில் அவரது வக்கீல் இந்த மனுக்களை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் ஷேக் ரஷித், சிராஜுல் ஹக் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த மனுக்கள் அமைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கான விசாவை நவாஸ் ஷெரீப் பெற்றிருந்ததாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கான ஆவணங்களும் இந்த மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.