வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடமாகாண சபையில் எங்களுடைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் டெனீஸ்வரன் தொடர்பில் ஆராயப்பட்டது.
வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக எங்களுடைய 6 உறுப்பினர்களில், டெனீஸ்வரன் மட்டும் கையெழுத்திட்டிருந்தார்.
அவருடைய நடவடிக்கை எங்களுடைய கட்சியின் அனுமதி இல்லாமலும் கட்சியின் ஆலோசனை இல்லாமலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினால் நாங்கள் அவரிடமிருந்த இது தொடர்பில் விளக்கம் கோரி கடிதமொன்றினை அனுப்பியிருந்தோம்.
அக் கடிதத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டமைக்கு ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு காரணமேதும் உண்டா என கோரியிருந்தோம்.
அதற்கான பதிலை கடிதம் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு கட்சியின் சார்பில் என்னால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் டெனீஸ்வரனிடமிருந்து எழுத்து மூலமான எவ்வித கடிதமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்றைய தலைமைக்குழு கூட்டத்தில் அவர் சமுகமளித்து தனது நடவடிக்கை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
நாமும் அவரிடம் சில கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்தல்களை செய்துள்ளோம்.
இந்த நிலையில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சருடனும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பின் போது எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் வட மாகாண அமைச்சரவையை முதலமைச்சர் மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டிருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சி நடவடிக்கையை மீறினார் என்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதனை பரிசீலிப்பதாகவும் முடிவை இன்று தான் அறிவிப்பதாகவும் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவருடைய முடிவை பொறுத்து தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா, அவ்வாறு முன்னெடுத்து முடிவை எட்டுவதா, அல்லது அந் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.