(முஜிப் கூளாங்குளம்)
‘விடிவெள்ளி’ பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியாகிய அறிக்கை.
“மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட முசலிப் பிரதேசத்தில் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சுவீகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை அமைத்திருந்த நிலையில் அக் குழுவுக்கு இது வரை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து முறையான , போதுமான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நம்பகமாக அறிய முடிகிறது. குறித்த குழு தனது அறிக்கையை இம்மாதம் 21 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதற்கிடையில் முஸ்லிம்கள் இக் குழுவுக்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காவிடின் இதுவிடயத்தில் நாம் தோற்றுப் போக வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்படும்”.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “மாவில்லு பேணற்காடு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறி அப் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை நாம் அறிவோம். இது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபுணர்கள் ஐந்து பேர் அடங்கிய குழுவினை நியமித்திருந்தார். இக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதியொருவரும் உள்ளார். இந் நிலையில் இக் குழு அண்மையில் முசலி பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து ஆராய்ந்தது. இக் குழு முன்னறிவித்தலுடன் அங்கு சென்ற போதிலும் முஸ்லிம்கள் தரப்பில் தமது நியாயமான கோரிக்கைகள் என்ன? முஸ்லிம்களின் பூர்வீக காணிகளுக்குரிய ஆதாரங்கள் என்ன? அவை தொடர்பான ஆவணங்கள் எவை ? என்பன தொடர்பில் போதுமான தகவல்கள் இக் குழுவுக்கு வழங்கப்படவில்லை என அறிய முடிகிறது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.
குறித்த குழுவானது தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான அறிக்கையை தயார் செய்து வருகிறது. எனினும் முஸ்லிம்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிபாரிசுகளை முன்வைப்பதற்கு போதுமான தகவல்கள் அவர்களிடம் இல்லை என்பது ஆபத்தானதாகும்.
எனவேதான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் பொது மக்களும் சிவில் சமூக சக்திகளும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கட்டிடத்தில் அமைந்துள்ள குறித்த குழுவின் அலுவலகத்தில் தமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்த இறுதி சந்தர்ப்பத்தையும் நாம் பயன்படுத்தாவிடின் நாளை நமது பூர்வீக நிலங்களை இழக்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்படலாம். அதன் பிறகு போராட்டங்களில் ஈடுபடுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.