நல்லாட்சி அரசை உருவாக்க 2015ஆம் ஆண்டு கைகோத்து பிரசாரத்தை முன்னெடுத்த சிவில் அமைப்புகளும், சில கட்சிகளும் அரசுக்கு எதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த ஆயத்தமாகியுள்ளன.
இலஞ்ச, ஊழல், நிதி மோசடிகளை ஒழிக்க உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசு அத்தகைய மோசடிகளைச் செய்ய இடமளித்துள்ளமை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக சோபித தேரருடன் நாட்டின் அனைத்து சிவில் அமைப்புகளும், சிறிய கட்சிகளும் கைகோத்து பிரசாரம் செய்தன. இவை பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தன.
ஆனால், ஆட்சிமாற்றத்தின் பின்னர் கடந்த அரசின் இலஞ்ச, ஊழல், நிதி மோசடிகள் குறித்து இறுக்கமான தீர்மானம் எதனையும் நல்லாட்சி அரசு முன்னெடுத்திருக்கவில்லை.
மறுபுறத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள் மீதும் அத்தகைய மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி ஆணைக்குழுவால் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள சாட்சியங்கள் மூலம் அந்த மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின்றன.
இதனையடுத்து நல்லாட்சிக்காக அயராது பாடுபட்ட சிவில் அமைப்புகள் அரசுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
கடந்த அரசான மஹிந்த அரசைப்போன்றே தற்போதைய அரசும் இலஞ்ச, ஊழல், நிதி மோசடிகளுக்கு இடம்கொடுத்துள்ளதாகக் கூறி எதிர்வரும் 15ஆம் திகதி அரசுக்கு எதிராகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை குறித்த சிவில் அமைப்புகள் ஆரம்பிக்கவுள்ளன.
இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.