சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது.
அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.
இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வட கொரியா கடுமையான ஊழிக்காலப் பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கையுடன் நேற்று மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்க ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த உலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அவரது மிரட்டலுக்கு சீனா இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் சூழல் மிகவும் சிக்கலானதாகவும், உணர்வுப்பூர்வமானதுமாக உள்ள நிலையில் இதில் தொடர்புடையவர்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.