வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெரிவித்து முதலமைச்சர் ரவிகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அந்த மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
வடமாகாண முதலமைச்சருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் கையளித்துள்ள மனுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலுமே, முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதன்படி, ரவிகரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தன்னிலை விளக்கத்தை வழங்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் ரவிகரனுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வியடம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் முற்றிலும் மறுப்பு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பொது அமைப்புகள் மனு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய்யான கருத்து. அரசியல் நோக்கங்களுக்காக ஒரு குழுவினரே இவ்வாறு மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
இந்த வியடம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடமாகாண முதலமைச்சர் இது குறித்து தன்னிடம் பேசவுமில்லை. அத்துடன், விளக்கம் கோரி எந்தவொரு கடிதமும் அனுப்பவுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.