Breaking
Tue. Nov 26th, 2024

கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாகக் கை உயர்த்துவாரெனின், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி தெற்கின் முற்போக்கு மக்களுக்கும் துரோகியாக மாறுவார் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி பெயர்ப் பட்டியலைக் கோருவதென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதேநேரம் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஒத்திவைத்தல் தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வர்த்தமானி அறிவித்தலூடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

அதற்கேற்ப, எதிர்காலத்தில் ஊவா மாகாணம் தவிர்ந்த ஏனைய சகல மாகாண சபைத் தேர்தல்களும் ஒத்திவைக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கும், புதிய தலைவர்கள் உருவாவதைத் தடுத்து, ‘இரண்டு வருடங்களுக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களை இல்லாமல் செய்வதற்கும்”, மாகாண சபைகளை நிர்வகிப்பதற்கும் ‘கொழும்பு அரசாங்கத்திற்கு’ அல்லது வடக்கு தமிழ் இளைஞர்கள் கூறுவதைப்போல ‘சிங்களப் பாராளுமன்றத்திற்கு’ அதிகாரத்தை வழங்குவதாயின், தான் பிரதிநிதித்துவம் செய்கின்ற கிழக்குத் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, மாகாண சபை முறைமைக்காகவும் குரல் கொடுத்த தெற்கின் முற்போக்கு மக்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் துரோகியாக மாறுவார்.

அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றாக தெற்கின் முற்போக்கு மக்கள் ‘மாகாண சபை முறைமைக்காக’ தமது உயிர்களையும் பணயமாக வைத்தனர். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர்; மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்காக வேண்டி தமது உயிர்களையும் பலி கொடுத்தனர்.

மாகாண சபை முறைமையை உருவாக்கிய ஐ.தே.க. அன்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, மக்களைக் கொலை செய்து மக்களது சொத்துக்களை அழித்த, பேருந்துகளை எரித்த, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, தற்போது இந்நாட்டின் மாகாண சபைத் தேர்தல்கள் வரைபடத்தைப் பாராளுமன்ற சதி முயற்சி ஒன்றினூடாக திசை திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் அப்பாலான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 13+ இன்று கனவாக மாறியுள்ளது.

கிழக்கு மாத்திரமன்றி வடக்கு மக்களுக்கும் மாகாண சபைகளுக்கு, உரிய காலத்தினுள் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்வதற்கான உரிமையுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் திட்டத்தின்’ மூலம் மாகாண சபைகள் முறைமையானது, மீண்டும் ஒருமுறை கொழும்பு அரசாங்கத்தின் கீழ்க் கொண்டு வரப்படுகின்றது என்பது தெளிவாகின்றது. அதனூடாக மாகாண சபைகளின் சுயாதீனம் இல்லாதொழிக்கப்படுகின்றது.

மாகாண சபைகள் முறைமை என்பது, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் எண்ணக்கரு ஆகும். அதற்காக வேண்டி தென்பகுதி மக்கள் மரணம் வருமெனத் தெரிந்து கொண்டே கஷ்டமான சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தனர்.

வாக்கெடுப்பைப் பிற்போடுதல், தேர்தல்கள் இன்றி மாகாண சபைகளை நடாத்திச் செல்லுதல், மாகாண சபைகளைக் கலைக்காது ‘கொழும்பு அரசாங்கம் அல்லது சிங்களப் பாராளுமன்றத்தின்’ மூலம் மாகாண சபைகளை நிருவகித்தல் என்பன ஜனநாயகமாக அமையாது.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போடும் சட்டத்திற்கு’ ஆதரவு வழங்கக் கூடாது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற தோட்டப்பகுதி மக்களுக்கு, தமக்கான மக்கள் பிரதிநிதியை நியமித்துக் கொள்வதற்காகவுள்ள உரிமையானது, சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதன் மூலம் இல்லாமல் போகின்றது என்பதைத் தோட்டப்புறங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்குத் தமிழ்த் தலைவர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பாரம்பரிய தோட்டத் தலைமைத்துவமும் புரிந்து கொள்ள வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *