Breaking
Fri. Nov 22nd, 2024

அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்படுகின்ற உதவி தொகை முறையாக எமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் சமுர்த்தி பயனாளர்கள் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கான உதவி தொகை முறையாக வழங்கப்படவில்லை எனவும், உதவி தொகை நிறுத்தப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவித்து சுமார் 700இற்கும் அதிகமான சமுர்த்தி பயனாளிகள் குறித்த பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் அம்பகமுவ பிரதேச செயலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமாகி கினிகத்தேன நகரம் வரை சென்று மீண்டும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்தது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் 2,000 ரூபா தொடக்கம் 3,500 ரூபா வரையான உதவி தொகை கூப்பனாக வழங்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த தொகையில் சமுர்த்தி பயனாளிகளுக்கான நலன்புரி சேவைகளுக்காக ஒரு தொகை பணம் வெட்டப்பட்டு மிகுதி பணத்தொகையே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.

இருந்தும் தற்பொழுது சமுர்த்தி உதவி தொகை பெறும் சில பயனாளிகளுக்கு இந்த உதவி தொகை உரிய தருணத்தில் வழங்கப்படாமலும், சிலருக்கு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமுர்த்தி பயனாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 

மேலும் இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் கவனத்திற்கொண்டு தமக்கான உதவி தொகையை சரியான விதத்தில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பேரணியின் காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிப்படைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இரண்டாம் இணைப்பு!

தமக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்திக் கொடுப்பனவுஉரிய முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் காரணமாக கினிகத்தேன நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கினிகத்தேன நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வீதியை மறித்து வாகனங்களை செல்லவிடாது இடை மறித்தமையினாலேயே அங்கு அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

 

இதன் பின்னர் அம்பகமுவ பிரதேச செயலாளரிடம் சமுர்த்தி பயனாளிகளால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஹட்டன், கண்டி மற்றும் ஹட்டன், கொழும்பு நகரங்களுக்கிடையிலான போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *