Breaking
Mon. Nov 25th, 2024

சரியோ,பிழையோ ஒரு கொள்கைக்காய் உயிரைக் கொடுப்பவர்களை வரலாறு தியாகிகள் என்கிறது.சுயநலத்திற்காய் கொள்கைகளை விற்பவர்களை வரலாறு துரோகிகள் என்கிறது.
உமர் முக்தார்,மல்கம் எக்ஸ்,மார்டின் லூதர் கிங்,மஹாத்மா காந்தி,ஆப்ரஹாம் லிங்கன் என்று பலர் வரலாற்றில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியோ, பிழையோ ஒரு கொள்கைக்காக இறுதிவரை போராடியவர்கள் அவர்கள்.

உண்மையாளர்களின் கருத்துக்களுக்கு எரிக்கும் தன்மை இருக்கிறது.அவர்களின் கருத்துக்கள் ஒரு சமூகத்தில் விழும்போது தீக்குச்சிகளாய் விழுகிறது.மெதுவாக அவை தீப்பந்தங்களாகி அறியாமைச் சமூகத்தின் இருள் சூழ்ந்த காடுகளை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்புக்கங்குகளாய் மாறுகிறது.அந்தக் கணன்றெரியும் ஏற்றப்பட்ட கொள்கையின் சுடரை அணைக்கமுடியாதவர்கள், ஏற்றியவனை அணைக்க நினைப்பார்கள்.வளர்வதை அழிக்கமுடியாமல் வளர்த்தவனை அழிக்க நினைக்கும் பலவீனர்கள் அவர்கள்.இவ்வாறுதான் அலிஉதுமான் அவர்களின் கோட்பாடுகளைப் புதைக்கமுடியாமல் கோட்பாட்டாளனைப் புதைக்கும் முயற் சியில் அந்தப் பலவீனர்கள் வெற்றி பெற்றநாள் இது.

ஜனநாயக அரசியல் வாதிகள் மீது எனக்குள் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் வெறுப்பிற்கு மர்ஹூம் அலி உத்மான் போன்ற நல்ல அரசியல்வாதிகளை நான் சந்திக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வியாழக்கிழமை குடித்த போதைமயக்கத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்குப் போகாமல் காலை ஆட்டிக்கொண்டு தூங்கும் அரசியல் வாதிகளை அதிகம் பார்த்துப் பழகிவிட்ட எமது கண்கள் ஓடும் ரெயிலில் பத்திரிகையை விரித்து ஒருவேளைத் தொழுகையைக் கூட விடாது தொழும் இவரைப் போன்ற நல்ல அரசியல் வாதிகளை காணாதது கவலைதான்.

கெட்டவர்களையும்,பொருத்தமில்லாதவர்களையும்,சுயநலவாதிகளையும் மாத்திரமே அரசியலில் கண்டவர்கள் நாங்கள்.நல்லவர்கள் அரசியலுக்கு வந்தகாலம் மர்ஹூம் அலிஉதுமானின் அடக்கத்தோடு அடங்கிவிட்டது.

காங்கிறசின் அரசியல் விதையை தனது கைகளால் விதைத்தவர்களுள் அவரும் ஒருவர்.போதாதற்கு அந்த விதை வளரத்தேவையான ஈரத்தை தனது இரத்தத்தால் கொடுத்துவிட்டு இறந்தபோன மனிதரவர்.அந்த லட்சியவாதிகளின் இதயச்சாற்றை உறுஞ்சி வளர்ந்ததால்தான் காங்கிறஸ் பட்டமரமென்றாலும் இன்னும் சாகாமல் இருக்கிறது.பதவிக்காகவும் பையை நிரப்புவதற்காகவுமல்லாமல் கொள்கைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் அவர்கள்.இப்படிப்பட்ட நல்லவர்களின் பிரார்த்தனைகளால்தான் கிளை உடைந்த காங்கிறஸின் வேர்களில் எமது அரசியல் கனவு இன்னும் பூத்துக்கிடக்கிறது.

மர்ஹூம் அலி உதுமான் போன்ற அரசியல் தியாகிகளின் ரத்தத்தையும்,சதையையும்,எலும்பையும் உறுஞ்சி வளர்ந்த அந்த மரத்தில் தோட்டக்காரர்களைக் கொன்று விட்டு பழத்தை மட்டும் காவு கொள்ள கழுகுகள் இன்று கூடுகட்டிக்கும்மாளமடிக்கின்றன.
மர்ஹூம் அலி உதுமானைப் போன்றவர்கள் விதைத்துவிட்டுப் புதைந்துவிட்டார்கள்.

ஹகீமைப்போன்றவர்கள் வளர்ந்ததைப் புதைத்துவிட்டு நிற்கிறார்கள்.

ஓ,சுயநலன்களுக்காக சமூகத்தின் சுயத்தையே விற்கும் பிணந்தின்னிகளே,

அலி உதுமானின் பிடி சாபத்தில் நீங்கள் அழிந்து போய்விடுங்கள்.

வேர்களை அறுத்துவிட்டு கனிகளை எதிர்பார்க்கும் ஏமாளிகளே,

அலி உதுமானின் அரசியல் கண்ணீரில் கரைந்து விடுங்கள்.

எங்கள் அரசியல் கால்களை முடமாக்க நினைக்கும் கோழைகளே,

அலி உதுமானின் இரத்தக் குளத்தில் இறந்துவிடுங்கள்.
முடிவுகள் வரும் வரைக்கும்,
நீங்கள் புதைத்துக்கொண்டே இருங்கள்.

விடிவுகள் வரும் வரைக்கும்,
நாங்கள் விதைத்துக்கொண்டே இருப்போம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *