எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி க.பொ.த. (உ/த) பரீட்சை ஆரம்பமாகின்றது. முஸ்லிம் மாணவிகள் தமது கலாசார ஆடையான பர்தாவுடன் பரீட்சை மண்டபத்திற்குச் சென்று பரீட்சை எழுதுவதில் எவ்வித இடையூறுகளும் விளைவிக்க வேண்டாம் என பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் பர்தா அணிந்து பரீட்சை எழுத வந்த மாணவர்கள் பர்தாவோடு பரீட்சை எழுதவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதனால் மாணவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு பெறுபேறுகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.
பெற்றோர் உள்ளிட்ட கல்விச் சமூகம் தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. முஸ்லிம் கலாசார ஆடையோடு பரீட்சை எழுத முடியும் என பரீட்சை தொடர்பான விளக்கக் கூட்டங்களின் போது தெளிவுபடுத்தப்படுகின்ற போதும் சுற்றறிக்கைகள் காணப்படுகின்ற போதும் ஒரு சில பரீட்சை மண்டபங்களில் கடமைபுரிகின்ற அதிகாரிகள் தான்தோன்றித் தனமாக இனவாத மனப் போக்கில் செயற்படுவதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது விடயத்தில் இலங்கை பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர். எதிர்வரும் எட்டாம் திகதி முதல் முப்பத்தோராம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.