(பிறவ்ஸ்)
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு அங்குள்ள விவசாயிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு நடவடிக்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணசபை அலுவலகத்துக்கு வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, முதலமைச்சர் தலைமையில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. பின்னர், 2013-2014 காலப்பகுதியில் விவசாயிகள் வட்டமடு காணியில் விவசாயம் செய்வதற்கான அனுமதிக் கடிதத்தை அமைச்சர் ரவூப் பெற்றுக்கொடுத்தார்.
பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகளில் தொடர்ந்து விவசாயம் செய்யும்;;பொருட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் பொத்துவில் பிரதேச செயலகத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர், அக்கரைப்பற்றில் நடைபெற்ற காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நடவடிக்கைள் குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.
அதன்பின்னர், வன பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், காணி திணைக்கள ஆணையாளர், வன ஜவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன் பாராளுமன்றத்தில் உயர்மட்ட கூட்டமொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய காணிகள் காணப்படும் இடத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஜனாதிபதியின் செயலாளருக்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளருக்கும் விடுத்த வேண்டுகோளுக்கமைய, கடந்த (24) திங்கட்கிழமை இந்த களவிஜயம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விஜயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.என். முனசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான், எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முபீன், எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, பளீல் பீ.ஏ. மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது வட்டமடு, கிரான்கோமரி, வேகாமம், பள்ளியடிவட்டை, கிராங்கோ போன்ற காணிகளுக்கு இக்குழு விஜயம் மேற்கொண்டது. காட்டுப் பகுதிக்குள் காணப்படும் மேற்படி காணிகளுக்கு செல்ல கரடுமுரடான ஒற்றையடிப்பாதைகள் மூலம் சுமார் 200 கிலோமீற்றர் தூரம்வரை பயணம் செய்தனர். காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த காட்டுப் பயணம் சாப்பாட்டுக்கு கூட நேரம் ஒதுக்காமல் மாலை 6.30 மணிவரை தொடர்ந்தது. இதற்கு வந்திருந்த அரசாங்க அதிபரும், திணைக்கள அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
அதன்பின்னர் மறுநாள் (25) செவ்வாய்க்கிழமை, வட்டமடு காணிப்பிரச்சினை தொடர்பில் முரண்பட்டுள்ள விவசாயிகளையும் பாற்பண்ணையாளர்களையும் அழைத்து சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று திணைக்கள அதிகாரிகளினால் நடாத்தப்பட்டது. அத்துடன் பள்ளியடிவட்டை காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான கலந்துரையாடலும் அங்கு நடைபெற்றது. இதன்மூலம் பிரச்சினைகள் தீர்வைநோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
வட்டமடு காணிப்பிரச்சினை
அக்கரைப்பற்று முஸ்லிம் விவசாயிகள் வட்டமடுவில் காணியில் 1970களில் காடுகளை வெட்டி அங்கு விவசாயம் செய்து வந்தனர். 1977ஆம் ஆண்டு சாகாம நீர்ப்பாசன விடுதியில் அப்போதைய உதவி அரசாங்க அதிபராகவிருந்த எஸ்.எல். சிறிவர்தனவினால் காணி கச்சேரி நடத்தப்பட்டது. இதன்பின்னர், 1980களில் உதவி அரசாங்க அதிபர் வேதநாயகம் கையொப்பமிட்டு விவசாயம் செய்வதற்கான வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
பின்னர், 1985ஆம் ஆண்டு காணி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எல்.டி.ஓ. அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இக்காணிகளுக்கு நீர்ப்பாசனம் பெருவதற்காக ஏறத்தாள 20 குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு கமநல சேவை திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 01.10.2010 அன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்மூலம் இக்காணிகள் உள்ளடங்கலாக, எவ்வித களப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படாமல் வன பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அக்கரைப்பற்று முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 1176 ஏக்கர் விவசாயக்காணிகள் வன பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர், 19.11.2013 அன்று திருகோணமலையிலுள்ள மாகாணசபை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தடங்களுமின்றி தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான எழுத்துமூல அனுமதி வன பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாற்பண்ணையாளர்கள் தங்களது மாடுகளுக்கான மேய்ச்சல்தரையாக வட்டமடு பிரதேசத்தை பயன்படுத்தி வந்துள்ள நிலையில், அக்கரைப்பற்று விவசாயிகளுக்கும் பாற்பண்ணையாளர்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. இதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. 185 ஏக்கர் வட்டமடு காணிக்குள் பாற்பண்ணையாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவே உட்பிரவேசிக்க முடியாது. விவசாயிகள் தொடர்ந்து ஆட்சிப்படுத்த முடியுமென 1981ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வட்டமடு காணியில் தங்களுடைய உறவுகளை இழந்ததாக கூறும் அக்கரைப்பற்று விவசாயிகள், 2015 வரை விவசாயம் செய்ததாக கூறுகின்றனர். தங்களது ஜீவனோபாயமான விவசாயத்தை தொடர்ந்து செய்வதற்கு வட்டமடு காணியை மீட்டுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வட்டமடுவில் விவசாய காணிகள் இருப்பதை கள விஜயத்தின்போது ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், வன பாதுகாப்பு திணைக்களத்தினால் எத்தனை ஏக்கர் காணிகளை விவசாயத்துக்காக விடுவிப்பது என்பது தொடர்பில் பாற்பண்ணையாளர்களுடனும் விவசாயிகளுடனும் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதன்பிரகாரம் மறுநாள் அம்பாறை மாவட்டத்தில் இருதரப்புக்கும் இடையில் அதிகாரிகள் முன்னிலையில் விசேட கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குள் அனுமதிக்கப்படாத தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், வட்டமடு பிரச்சினை தொடர்பில் உண்மைக்குப் புறம்பாகவும் பக்கச்சார்பாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளதாக வட்டமடு விவசாய சங்கத்தின் செயலாளர் எஸ்.எம். ஜுனைடீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிரான் கோமாரி காணிப்பிரச்சினை
நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஏக்கர் வீதம் கிரான்கோமாரி பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட கிரான்கோமாரி பிரதேசத்தில் நிந்தவூரைச் சேர்ந்த ஏழை விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கர் வீதம் 720 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டன. 1954ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர்.
இந்நிலையில் யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவனிப்பாரற்றுக்கிடந்த சில காணிகளில் காடுகள் வளர்ந்துள்ளன. 1960 தொடக்கம் 1985 வரை விவசாயம் செய்யப்பட்ட இக்காணிகள், 1985 தொடக்கம் 2009 வரை விவசாயம் செய்யாமல் தடைப்பட்டிருந்தன. தற்போது 500 ஏக்கர் காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 220 ஏக்கர் காணிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் அரசியல் தலைமைகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, மூன்று தடவைகள் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு காணி அனுமதிப்பத்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், 2015 ஒக்டோபர் 29ஆம் திகதி பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இருந்த நீல் டி.அல்விஸ், இக்காணிகளுக்கு பதிலாக மாற்று காணிகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தும் அது இன்னும் வழங்கப்படவில்லை.
குpரான்கோமாரி பிரதேசத்துக்கு சென்ற குழுவினரிடம் எஞ்சியுள்ள காணிகளை மீட்டுத்தருமாறு நிந்தவூர் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தீர்வுகாண்பதற்கு காணிகளை மீண்டும் அளக்கவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காணி அமைச்சருடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக உறுதியளித்தார்.
விவசாயிகளுக்கு சொந்தமான காணிகள் வன பாதுகாப்பு பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால், அதனை விடுவிப்பதில் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் அவற்றை விடுவிக்க முடியுமென அரசாங்க அதிபர் களவிஜயத்தின்போது தெரிவித்தார்.
வேகாமம் காணப்பிரச்சினை
பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 1820 ஏக்கர் காணிகளில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக பயிர்செய்து வந்தனர். பயங்கரவாதம் அச்சுறுத்தல் காரணமாக பயிர்ச்செய்கை கைவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிப்பிரதேசம் யானைகள் நடமாடும் இடமாக இருப்பதாக காரணம்காட்டி வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
வேகாமம் காணிகள் 1956 தொடக்கம் 1990 வரையும் 2009 தொடக்கம் 2011 வரையும் பயிர்செய்யப்பட்டன. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 2006 சுற்றுநிருபத்தின்படி அங்கு பயிர்செய்ய முடியாதவாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பொத்துவில் – லாஹ{கல எல்லைப் பிரச்சினையும் அங்கு காணப்படுகிறது.
இதில் 450 ஏக்கர் காணிகள் மாத்திரம் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் பிரகாரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய காணிகள் யானைகளுக்காக சென்றாலும் பரவாயில்லை இந்த 450 காணிகளையாவது விவசாயம் செய்வதற்காக எங்களுக்கு மீட்டுத்தாருங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த காணி அனுமதிப்பத்திரங்களில் சில போலியான ஆவணங்களும் இருப்பதாக வந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். சகல காணி ஆவணங்களையும் ஒன்றுதிரட்டி அவற்றை பரிசீலித்து, மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அங்கு இணக்கம் காணப்பட்டது. காணி ஆவணங்களை ஒன்றுதிரட்டும் பொறுப்பை ரவூப் ஹக்கீம் விவசாய தலைவரிடம் ஒப்படைத்தார்.
பள்ளியடிவட்டை காணப்பிரச்சினை
பொத்துவில் விவசாயிகளுக்கு சொந்தமான 180 ஏக்கர் விவசாய காணிகள் லாஹ{கல பிரதேச செயலகத்துக்குட்பட்ட பள்ளியடிவட்டையில் உள்ளன. காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள விவாசாயிகள் 1978ஆம் ஆண்டிலிருந்து அங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2014 வரை அங்கு விவசாயம் செய்துவந்துள்ள நிலையில், குறித்த காணிகள் வன பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருவதாக கூறப்பட்டு, வன பாதுகாப்பு திணைக்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. 180 ஏக்கர் பள்ளியடிட்டை காணியில் தொடர்ச்சியாக விவசாயம் செய்துவந்த 150 ஏக்கர் காணிகளையாவது மீட்டுத்தருமாறு அங்குள்ள பொத்துவில் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விவசாயிகள் உண்மையான காணிப்பத்திரங்களை வைத்திருந்து, தொடர்ச்சியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவற்றை வழங்குவதற்கு நியாயமான நடவடிக்கைகள் பின்பற்றப்படுமென களவிஜயத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
கரங்கோ காணப்பிரச்சினை
லாஹுகல பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரங்கோ எனும் பிரதேசத்தில் பொத்துவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 503 ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அப்பிரதேசத்தில் நீண்டகாலமாக விவசாயக் குடியேற்றம் இருந்தமைக்கான இடிபாடுகள் அங்கு தெளிவாக காணப்படுகின்றன. இந்நிலையில், லாஹ{கல பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை மக்கள் தங்களுக்கும் அதில் பங்கு இருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கரங்கோ காணிகளை பொத்துவில் விவசாயிகளுக்கு வழங்குவதை தடுக்கும்வகையில் குறித்த பிரதேசம் யானைகளின் பாதையாக இருப்பதாக கூறப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினாலும், வன பாதுகாப்பு திணைக்களத்தினாலும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
05.11.2013 அன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த போகத்தில் விவசாயம் செய்வதற்கு காணிகளை வழங்குவதாக அப்போதைய அம்பாறை மாவட்ட செயலளார் நிவில் டி அல்விஸ் தெரிவித்திருந்தும் அவை இன்னும் வழங்கப்படவில்லை.
காணிக்கு உரிமை கோருகின்றவர்கள் வைத்துள்ள அனுமதி பத்திரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறப்பட்டும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அதிகாரிகள் அங்கு களவிஜயம் மேற்கொண்டபோது, சம்பவ இடத்துக்கு வருகைதந்திருந்த பெரும்பான்மை மக்கள் அந்தக் காணிகள் எங்களுக்கு சொந்தமானவை என்று வாதிட்டுக்;கொண்டிருந்தனர். இந்நிலையில் இரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை எட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒருநாள் களவிஜயத்தின்போது பார்வையிடப்படாத காணிகள் தவிர, இன்னும் பல காணிப்பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளையும் விரைவில் மேற்கொள்வதற்கு உத்ததேசிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு தீர்வுகள் கிடைக்காவிட்டால் அடுத்து, அமைச்சு மட்டத்தில் தீர்வுகளை எட்டவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.