(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
துருக்கிய ஜனாதிபதி செய்யித் அர்துகான் உலக முஸ்லிம்களுக்கு அல் – அக்ஸாவைக் காப்பாற்றுவதற்கு முன்வருமாறு விடுத்துள்ள வேண்டுகோளில் இலங்கை முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து மனிதர்கள் தொழ வேண்டும் என்ற பிரகடனத்தைச் செய்த புனித தலம் மஸ்ஜிதுல் அக்ஸா. தொழுகையின் கட்டளை இறங்கிய இடத்திலேயே இன்று முஸ்லிம்கள் தொழ முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
மஸ்ஜிதுல் அக்ஸா பற்றி பனூஇஸ்ராயீல் சூராவில் “அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபிவிருத்தியடைச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை காண்பிப்பதற்காகவே அழைத்துச் சென்றோம் நிச்சயமதாக! என்று அந்தச் சூரா குறிப்பிடுகின்றது. எனவே, தொழுகை இல்லாமல் முஸ்லிம்கள் இல்லை. இந்த மண்ணில் ஏற்பட்ட இவ்வளவு பெரிய விபரீதத்தைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் உலகம் கைகட்டி வாளாவிருப்பது என்பது பெரும் மர்மத்துக்குரிய விடயமாகும். அது மட்டுமல்ல, எமது நாட்டிலுள்ள முஸ்லிம்களும் கிப்லதுல் ஊலா என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் இந்த விபரீதத்தைக் குறித்து ஏன் வாளாவிருக்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
இவ்வேளையில்தான் துருக்கியின் ஜனாதிபதி செய்யித் அர்துகான் உலக முஸ்லிம்களுக்கு அல் – அக்ஸாவைக் காப்பாற்றுவதற்கு முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் எமது நாட்டு முஸ்லிம்களும் கட்டாயம் ஒன்று சேரவேண்டும். பற்பல விடயங்களுக்காக வேண்டி இலங்கையில் பள்ளிவாசல்களில் பற்பல விபரீதங்கள் ஏற்பட்ட போதும் அபாயகரமான வேளைகளிலும் பள்ளிவாசல்களில் குனூத் ஓதுவதற்கு எமது முஸ்லிம்கள் இப்போது பழக்கப்பட்டிருக்கின்றார்கள். அது முஸ்லிம்கள் வசமுள்ள பெரும் ஆயுதமுமாகும். இந்த ஆயுதத்தை நாம் மீண்டும் கூர்மையான முறையில் நாம் பாவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். ஸம்மியத்துல் உலமா போன்ற இயக்கங்களும் ஏனைய முஸ்லிம் இயக்கங்களும் இது குறித்து உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று பணிவாக வேண்டுகோளை விடுக்க வேண்டுகிறேன்.
எனவே நாடு பூராகவுள்ள பள்ளிவாசல்கள் தோறும் நபி ஸல் அவர்கள் வாழ்வில் ஒட்டிப்பின்னி இருக்கின்ற மஸ்ஜிதுல் அக்ஸாவைப்பற்றிய தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே இது குறித்து பள்ளிவாசல்கள் தோறும் குத்பாப் பிரசங்கங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றிய விடயங்களை பிரஸ்தாபித்து எமது நாட்டு முஸ்லிம்களுக்கு அறிவூட்டுவதற்கும் அல்லாஹ்வின் பால் இரு கரமேந்தி எமது இந்த புண்ணிய தலத்தை மீட்டுத்தருமாறு துஆச் செய்வதற்கும் இந்தப் பிரசங்ககங்களை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
1968ஆம் ஆண்டில் மஸ்ஜிதுல் அக்ஸா தீ வைக்கப்பட்ட போது கூட அந்த புனித பள்ளிவாசளில் முஸ்லிம்கள் தொழுவதற்கு கூட தடை செய்யவில்லை. ஆனால் மிகவும் பயங்கரமான தடை அப்போது விதிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம்கள் கைகட்டி பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியாது. எமது இஸ்லாமிய உணர்வுகள் தட்டி எழுப்பப்பட வேண்டும். அடுத்ததாக ஐ.நா.விலுள்ள முஸ்லிம் நாடுகள் இது குறித்து உடனடி (அவசர) நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல, நாமும் ஐ.நா. சபையில் ஒரு முக்கிய உறுப்பினர். உலகத்தின் பல முக்கிய விடயங்கள் பற்றி ஐ.நா. சபையிடம் பிரஸ்தாபிக்கிறோம். எனவே எமது அரசாங்கமும் மஸ்ஜிதுல் அக்ஸா சம்பந்தமாக சியானிச இஸ்ரவேலர்கள் மேற்கொண்டு வருகின்ற அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ. நா. சபையை உசார்படுத்துவதற்கு பல யோசனைகளை முன்வைக்க வேண்டுமென எமது நாட்டு ஜனாதிபதியை நாம் விநயமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். இந்த நாட்டு முஸ்லிம் சமுதாயததிற்கு அவர் செய்யக் கூடிய ஒரு பெரும் பணி என்பதையும் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம். என்றும் தெரிவித்துள்ளார்.