Breaking
Sat. Nov 23rd, 2024
முதுபெரும் முஸ்லிம் அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், இராஜதந்திரியும், சட்டவிற்பன்னருமான கலாநிதி ஏ.ஆர்.மன்சூரின் மறைவு இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம்பதித்த பன்முக ஆளுமையொன்றின் இழப்பாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அரசியலிலும், பொது வாழ்விலும் தனக்கென தனியானதொரு பாணியை வகுத்துக்கொண்டு நெறிபிரளாது வாழ்ந்து மக்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் மன்சூர்  முஸ்லிம்களால் மட்டுமல்லாது தமிழ் மற்றும் சிங்கள மக்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டார்.

கல்முனை தொகுதியை தமது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அவர், அம்பாறை மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது, முழுக்கிழக்கு மாகாண மக்களுக்கும் தாம் அமைச்சராக பதவிவகித்த காலத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
ஆரம்பத்தில் மாறுபட்ட அரசியல் அணியொன்றின் ஊடாக தமது மக்களை பாராளுமன்றத்தில்  பிரதிநிதித்துவப்படுத்திய அவர் பின்னர், எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அ~;ரபின் அரசியல் கொள்கைகளை அங்கீகரித்து, அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சமூக மேம்பாட்டுக்காக பங்களிப்பு நல்கியதை நாங்கள் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் மிகவும் நன்றியறிதலோடு நினைவூ கூருகின்றோம்.

அத்துடன், மறைந்த கலாநிதி மன்சூர் தமது அரசியல் வாரிசான புதல்வர் ரஹ்மத் மன்சூரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலம் மக்கள் பணிக்கு அர்ப்பணித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டுவது சாலப்பொருத்தமானது.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும், உறவினர்களுக்கும், கல்முனை மக்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவனவாழ்வு கிட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *