உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.
குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட ஏனைய சில கட்சிகள் ஐக்கிய தேசிய முன்னணியிலேயே போட்டியிட்டாலும், சில தொகுதிகளில் தனித்துக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பற்றி தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இதற்காக அக்கூட்டணியின் மத்திய குழு விரைவில் கூடவுள்ளது” என்று அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைசின்னத்தில் களமிறங்கும் முடிவை எடுத்திருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திலேயே களமிறங்கவேண்டுமென அதன் பங்காளிக்கட்சிகள் சில கோரிக்கைவிடுத்துள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மைத்திரி அணியுடன் இணைந்தாலும் ஒரு சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது திரணி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய சோசலிஸக் கட்சி, முன்னிலை சோசலிஸக் கட்சி ஆகியனவும் தனித்தே களம் காணவுள்ளன.
நவம்பர் இறுதி வாரத்தில் அல்லது டிசம்பர் முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும், தேர்தலை இழுத்தடிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என மஹிந்த அணி குற்றஞ்சாட்டுகின்றது.