(பரீட் இஸ்பான்)
இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனுக்குள் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்டதனால், அதனைப் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது பதவியிலிருந்து துரத்த வேண்டுமென பொது பலசேனா இயக்கமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை தலைவராகக்கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர தேரரும் இனவாதிகளும் பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
சதொச நிறுவனத்துக்கும் கொக்கேயின் சம்பவத்துக்கும் எந்தவிதமான நேரடியான அல்லது மறைமுகமான தொடர்புகள் இல்லையென்று மிகக்தெளிவாகத் தெரிந்தும், வேண்டுமென்றே அமைச்சர் றிஷாட் பதியுதீனை இவர்கள் குற்றஞ்சாட்டி அவர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது பதவியைப் பறிக்க வேண்டுமென ஓலமிடுகின்றனர்.
அமைச்சர் றிசாட் பதியுதீனை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டுமென்ற அவர்களின் நீண்ட காலத்திட்டத்துக்கு இந்த கொக்கேயின் விவகாரம் அவர்களது வாய்க்குள் அவல் போட்டது போன்று இருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாதிகள் கொண்டிருக்கும் குரோதத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீனின் குரல்வளையை நசுக்குவதன் மூலம் சாதிக்க முடியுமென அவர்கள் திட்டமிடுகின்றனர்.
பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, சுங்க அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் ஒருகொடவத்தைக்கு கொண்டுசெல்லப்பட்ட கொள்கலனை வில்பத்துவிலிருந்து கொண்டுவந்ததாக இவர்கள் கூறுவது அவர்களின் முட்டாள் தனத்தையே வெளிப்படுத்துகின்றது.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து சுங்க அதிகாரிகளினால் சோதனையிடப்பட்ட பின்னர் அந்த கொள்கலனுக்குள் போதைப்பொருள் இருந்ததென்றால், கப்பல் துறையுடனும் சுங்கத்திணைக்களத்துடனும் தொடர்புடைய அமைச்சர்களே அதற்கு வகை சொல்ல வேண்டுமே ஒழிய சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான ஒரு அமைச்சரை பதவி விலக வேண்டுமென இவர்கள் கோருவது இனவாதத்தின் வெளிப்பாடே.
இனவாதிகளின் இந்தக்கோஷங்கள் இப்படி இருக்க, நமது சமூகத்தில் அரசியல் நடத்தும் அரசியல் வங்குரோத்துக் கட்சிகள் இதற்கு ஒத்தூதுகின்றனர். தங்களது அரசியல் இருப்புக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீனினால் ஆபத்து ஏற்பட்டுவிட்டதென தூக்கமில்லாமல் திரியும் இந்த கட்சிகளின் முக்கியஸ்தர்கள,; தமது பினாமி எழுத்தாளர்களையும் போலி முகநூல் வீரர்களையும் பயன்படுத்தி எரியும் நெருப்பில் எண்ணெயயை ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சூடு சொரணையற்ற இந்த மொட்டை எழுத்தாளர்களின் எழுத்துக்களால் றிஷாட் பதியுதீனை கருவறுக்க முடியுமென இந்தக் கட்சிகளின் தலைமைகள் நப்பாசை கொண்டுள்ளனர்.
சமூகத்தின் நலனில் அக்கறைகொண்டு இறைவனை முன்னிறுத்தி பணிபுரிந்துவரும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை இறைவனின் துணையிருக்கும் வரை எந்தப் புல்லுருவிகளாலும் அசைக்க முடியாது.