இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை, அபிலாசைகளை, உரிமைகளை தக்க வைப்பதற்கு அரசியல் தேவையான விடயமாக காணப்படுகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் சிறிய ஆடை தொழிற்சாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
தனது கட்சிக்காரர் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை வேறு கட்சிக்காரர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்பட்ட காரணத்தினால் தான் அரசியல் தலைமைகளை இழக்க வேண்டி ஏற்படுகின்றது.
இவ்வாறான நிலைமை குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தான் காணப்படுகின்றதே தவிர வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை.
முஸ்லிம் மக்களுடைய இருப்பை, அபிலாசைகளை, தீர்வுகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படுகின்றது.
இந்த நாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகளில் எந்த கட்சி நல்லதென்று அறிந்து பக்குவம் பெறவில்லை என்றால் தங்களுக்கு வாக்காளர் என்ற அந்தஸ்தை பெற முடியாது.
வாழ்க்கையில் நல்ல விடயங்களை தேடிப் பார்க்கும் நீங்கள் தேர்தல் காலத்தில் மாத்திரம் ஏன் நல்லதை தேடிப் பார்ப்பதில்லை.
முஸ்லிம்களுக்கும், பள்ளிவாயல்கள், அரபுக் கல்லூரிகளுக்கும் பிரச்சனை வரும் போது யார் உடனே சென்று குரல் கொடுக்கின்றார் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் ஒன்று திரண்ட போதும் கூட மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று மக்களிடம் சொல்வதற்கு ஒரு கட்சி தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீனின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் சிறிய ஆடை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள தொலம்புகல, மாகோ, நிகவரட்டிய, ஆரியாகம, பொல்காவெல ஆகிய ஐந்து பிரதேசத்தில் சிறிய ஆடைத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் டாக்டர்.எஸ்.ஷாபி, சத்தோச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் எஸ்.நஸீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.