கடந்த 14.07.2017 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் வட மாகான வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரின் பாவனைக்காக ஆய்வு கூடம், களஞ்சியசாலை, அதிகாரிகளுக்கான தங்குமிடம் மற்றும் இயந்திரங்களின் தரிப்பிடம் போன்ற வசதியுடன் கூடிய கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த ஆய்வு கூடத் தொகுதியானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின்கீழ் வடக்கு வீதிகள் இணைப்பு செயற்திட்டத்தினூடாக 21 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதனூடாக வீதி வேலைகள், கட்டுமானங்களுக்கு தேவையான மண், கல் போன்ற மூலப்பொருட்களின் தரங்களை துரித கதியில் ஆய்வு செய்வதற்கும், அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள், உபகரணங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர் காலத்திலே வீதி அபிவிருத்தி வேலைகளை இலகுவாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் அவர்கள், அமைச்சின் செயலாளர் திரு. சி. சத்தியசீலன் அவர்கள், அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஈ.சுரேந்திரன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு ரி. சிவராஜலிங்கம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு. பிரபாகரமூர்த்தி, அமைச்சின் கணக்காளர் திருமதி த.அனந்தகிருஷ்ணன், மற்றும் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர்கள், நிறைவேற்று பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.