Breaking
Sat. Nov 23rd, 2024

நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென  சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

 

முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும்  வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் 177 ஏக்கர் வனப்பகுதியில் அமையவிருக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும், காடழிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவில் பாரிய கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில்  வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை உடனடியாக தடை செய்யவேண்டுமெனவும் தெரிவித்து குறித்த கண்டன பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

 

‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில்  போராட்டம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியிலிருந்து ஆரம்பித்து குடியேற்றம் நடைபெறவிருக்கும் கூளாமுறிப்பு வாரிவண்ணாங்காடு வரையான 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று  நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  “அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிக்காதே ‘, கூளாமுறிப்பு உனக்கு இன்னொரு வில்பத்தா ” , “ எங்கள்  வனத்தாய் மடியில் தீ வைக்க விடமாட்டோம் ”, “முல்லையில் வரட்சிக்கு காரணம் ரிசாத்” , “கூளாமுறிப்பு வீழாது உங்கள் கோழைக்கத்தி ஏறாது”, “மண்ணில் துளையிட்டது  வீர்கள் மட்டுமல்ல மாவீரர்களது கனவுகளும்தான்” , “நம்  பூமி  வந்தாரை வாழவும் வைக்கும் நம் பூமி வஞ்சகர்களை வீழ்த்தவும் நிற்கும்” போன்ற  கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,வவுனியா, கிளிநொச்சி  போன்ற இடங்களிலிருந்து திரண்டுவந்த இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கஜதீபன் ,புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு  அறிக்கை வெளியிட்ட இளைஞர்கள் அடாத்து குடியேற்றத்தையும் காடழிப்பையும் நாம் எதிர்க்கின்றோம் ,தமிழர்களின் தாயக பகுதியான வடக்கு கிழக்கு பிரதேசம் பாரிய அபாயங்களை எதிர்நோக்குகின்றது.

இந்த செயற்பாடுகளால் இலங்கை தீவில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்த நிலையில் தான் வடக்கு, கிழக்கில் நடாத்தப்படும் அடாத்து  குடியேற்றங்கள்  தமிழரின் இருப்பையும் பண்பாட்டு நிலத்தொடர்பையும்  முறித்து அழிக்கப்பதையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் நாம் தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றோம் . இந்த அபாயத்திலிருந்து விழிப்பு பெற்று எதிர்ப்பு குரல் காட்டவேண்டிய சூழல் தோன்றியுள்ளது. தொடர்பறாத  பண்பாட்டு நிலமாக காணப்பட்ட வடக்கு, கிழக்கு  பிரதேசம் தற்போது பௌதீக ரீதியில் உடைந்து காணப்பட இந்த திட்டமிட்ட குடியேற்றங்களே காரணம்.

 

கிழக்கில் எமது பண்பாட்டு ஊர்களை இன்று காணமுடியவில்லை  வளம் நிறைந்த கிழக்கு இப்படித்தான் துண்டு துண்டானது ,எங்கள் பண்பாட்டு தொடர்ச்சி முறிய முறிய நாம் பலமிழக்கின்றோம்.  இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு துறைகளிலிருந்து அழித்தொழிக்கப் படுகின்றோம் . இப்படித்தான் கிழக்கும் துண்டுதுண்டானது இப்போது வடக்கிலும் கண்வைத்துவிட்டார்கள் .மன்னாரில் வில்பத்து ,வவுனியாவில் பம்பைமடு ,முல்லைத்தீவில் குமாரபுரமென வன அழிப்பும் திடீர் குடியேற்றங்களும் உருவாகியுள்ளன.

தொன்றுதொட்டு நாம்  வாழ்ந்த எமது பண்பாட்டு  நிலங்களில் புதிய குடியேற்றங்களை உருவாக்குவதால் நாம் பின் தள்ளப்படுகின்றோம் ,மீள முடியாத அளவுக்கு பாதாளத்துக்கு தள்ளி விடப்படுகின்றோம் ,எனவே இளைஞர்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். முதல் கட்டமாக எங்கள்  கண்ணீராலும் செந்நீராலும் செழித்தோங்கிய வனத்தை அழித்து குடியேற்றங்களை உருவாக்கும் நாசகார செயல்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

முள்ளியவளை கூளாமுறிப்பு பகுதியில் வனங்களை அழித்து  குடியேற்றம் மேற்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும்  வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *