(ரஸீன் ரஸ்மின்)
முல்லைத்தீவில் காட்டை அழித்து வெளிமாவட்ட முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் ரிசாத் முயற்சிக்கிறார் என்று முன்னர் ௯றினார்கள்.
இப்போது, காட்டை அழித்து தனி முஸ்லிம் கிராமம் ஒன்றை உருவாக்க அனுமதிக்க முடியாது என்று வீதியில் நிற்கிறார்கள்.
இந்த நாட்டில் காணியில்லாத குடும்பங்களுக்கு பொருத்தமான இடத்தில் அரச காணியை அடையாளம் கண்டு அதனை குடியிருப்புக்காக பெற்றுக்கொடுப்பது என்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதற்கு தடையாக யாரும் இருக்க முடியாது. இதில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பாகுபாடு பார்ப்பது கிடையாது. முல்லைத்தீவில் இதற்கு முன்னரும் பல காடுகள் அழிக்கப்பட்டுதான் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய ஆர்ப்பாட்டத்தினால் கண்ட பிரயோசனம்? என்ன என்று கேட்டால் கிடைத்த பணத்தை போக்குவரத்துக்காகவும், சாப்பாட்டுக்காகவும் செலவு செய்ததுதான் மிச்சமே தவிர வேறு எதுவும் இல்லை .
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தினால் முல்லைத்தீவில் உள்ள காணியில்லாத தமிழ் குடும்பங்களின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட்டுள்ள நிலையே இன்றைய ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது தெளிவு.
இப்படிச் சொல்ல காரணம், உண்மையில் முல்லைத்தீவில் வாழும் காணியற்ற முஸ்லிம் குடும்பங்களைப் போல காணியற்ற எத்தனையோ தமிழ் குடும்பங்களும் இருக்கிறார்கள்.
எனவே, முல்லைத்தீவில் காணியில்லாத தமிழ் குடும்பங்களுக்கும் காணி வேண்டும் என்று கோஷம் எழுப்பியிருந்தால் ஆர்ப்பாட்டக்குழுவை பாராட்டியிருக்கலாம்.
ஆனால், ஆர்ப்பாட்டத்தின் பின்னர் , இப்போது எல்லோருக்கும் பொதுவான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் உணர்த்தியுள்ளது.
அதென்ன பொதுவான சட்டம் என்றால், முல்லைத்தீவில் இனி காட்டை அழித்து எந்த குடியேற்றங்களும் அமைக்கக் ௯டாது என்பதையே ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்திக் ௯றியுள்ளார்கள். இந்த கருத்தை நாங்களும் ஆதரிக்கிறோம்.
ஆனால், ஒர் இனத்தை மாத்திரம் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் தமது இனத்திற்கும் ஏற்படவுள்ள பாதிப்பை இவர்கள் அறிந்திருக்கவில்லை போல்.
உண்மைதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதனையுமே அறிந்திருக்க வாய்ப்பு இல்லைதான்.காரணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகமானவர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இப்படிதான் நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
நிரந்தரமாக முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு இன்றைய ஆர்ப்பாட்டம் பற்றி எதுவுமே தெரியாதாம். என்ன ஆர்ப்பாட்டம் என்று எங்களிடமே கேட்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
இதிலிருந்து தெரிகிறது இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னனி, இதற்குப் பின்னால் யார் இலுக்கிறார்கள். ரிமோட் யார் கையில் உள்ளது என்று.
நான் கேட்கிறேன் முல்லைத்தீவில் இருக்கின்ற அரச காணிகளில் முஸ்லிம் மக்களை குடியேற்ற அனுமதிக்க முடியாது என்றால், நீங்களே சொல்லுங்கள் அம்மக்களை எங்கு குடியேற்றுவது, இதில் அமைச்சர் ரிசாத் தலையிட தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்கல் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வீர்களா?
வடமாகாண சபை நிர்வாகத்தை கையில் எடுத்து இத்தனை வருடங்களிலும் தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகம் மீண்டும் திரும்பி தமது சொந்த ஊருக்கு மீள்குடியேற வந்துள்ளனர்.
இவர்களுக்கு மீள்குடியேறுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எப்போதாவது கேட்டிருக்கிறார்களா. அல்லது இந்த சமூகம் சார்ந்த பிரதிநிதிகளையாவது அழைத்து பேசியிருக்கிறார்களா.
எனவே, இந்த விடயத்தில் வடக்கு மாகாண சபையை வடக்கு முஸ்லிம்கள் எப்படி நம்பியிருக்க முடியும். இந்த நிலையில் காணி அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால் நிலைமை என்னவாகும்.
கௌரவ வடக்கு முதலமைச்சரே, நீங்கள் ஒரு நீதியரசர். உங்களை நாங்கள் நம்பினோம். இன்றும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். முல்லைத்தீவு முஸ்லிம் மக்களுக்கு காணி விடயத்தில் நீதியை பெற்றுத் தாருங்கள். நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்கக் ௯டியவர். யாருடைய பிழையான வழிநடத்தலுக்கும் தலைசாய்க்க மாட்டீர்கள் என இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கும் விடயத்தில் நாங்கள் பார்த்தோம். அதனால்தான் நாங்கள் உங்களை நம்புகிறோம்.
கௌரவ ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும். முல்லைத்தீவில் உள்ள காணியற்ற சகல தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் அனைவருக்கும் பொருத்தமான இடத்தில் காணியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.