வவுனியாவில் அரச அதிகாரிகளின் தேவைகளுக்கென வழங்கப்பட்ட வாகனம் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியாவில் அரச அதிகாரிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட்ட வாகனம் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அண்மையில் அதிகாரிகளின் வாகனம் ஒன்று அரசாங்க அதிபரின் அனுமதியின்று கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை வேறு சாரதி ஒருவரே செலுத்தியுள்ளார்.
இதன்போது குறித்த வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் படுகாயமடைந்த சாரதி இரண்டு வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
ஆனால் இந்த தகவல்கள் வெளியே வராமல் அந்த அதிகாரிகளால் திட்டமிட்ட வகையில் மூடி மறைக்கப்பட்டு விட்டது. தற்போது வாகனத்தை அரச செலவில் திருத்தி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கூறப்படுகிறது.
அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வாகனம் அரசாங்க அதிபரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பின்பு அதனை அரச செலவில் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 03ம் திகதி மாகாண கணக்காய்வாளர் பயணித்த வாகனம் ஒன்று மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும் விபத்து எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்று தகவல் வழங்கப்படவில்லை.
அத்துடன், மாகாண பணிப்பாளருடன் யார் பயணித்தார்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பொய்யான தகவல்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பில் அரச செலவில் வாகனத்தை திருத்தவதற்கு நேற்று(13) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரச உயர் பதவிகளை வகிக்கின்றவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் தமது தேவைகளுக்காகவும், உறவினர்களின் தேவைகளுக்காகவும் வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி விபத்தில் சிக்கியதும் அரச செலவிலேயே திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறன விடயங்களுக்கு நேரடியாக அரச நிதிகள் பாரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இது தொடர்பாக நிதி தாபனத்திற்கு பொறுப்பான அலுவலர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வாகனம் திருத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் குறித்த இரண்டு வாகன விபத்துக்களின் போதும் அது பயன்படுத்தவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.