இந்நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை புறக்கணித்து விட்டு ஆடம்பரமான செலவுகளை மாத்திரம் செய்வதற்கு அரசாங்கம் காட்டிவரும் ஆர்வம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFGG தவிசாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த அரசாங்கத்தின் போது உருவாகிய இனவாத நடவடிக்கைகளின் உச்சக்கடடமாக அளுத்கம கலவரம் இடம்பெற்றது. பல கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளும் உடமைகளும் தீக்கரையாக்கப்பட்டன. இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இன்னும் பல பேர் காயப்படுத்தப்பட்டனர். இந்த அநியாயங்கள் தொடர்பில் நீதியை நிலை நிறுத்தி உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
எனவே, ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலமாகவேனும் தமக்குரிய நீதியும், நிவாரணங்களும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள். அதனைச் செய்வதாகவே இந்த அரசாங்கமும் வாக்குறுதி வழங்கியது.
அளுத்கம கலவரம் நடந்து முடிந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்தக் கலவரத்திற்குப் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் தொடர்பில் ஏராளாமான பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இவையெதற்கும் எந்த நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்தக் கோடிக்கணக்கான இழப்புகளுக்கும் எந்தவொரு நஷ்ட ஈட்டையும் இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை. பலவகையான நிதி ஒதுக்கீடுகளுக்கு கடந்த சில மாதங்களில் அமைச்சரவையின விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அளுத்கமயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு எந்தவொரு அமைச்சரவைப் பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதனை காண முடியவில்லை. இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும் தமது அடிப்படை கடமையினை செய்வதற்கு தவறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் அளுத்கம மக்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டு விட்டதாகவும் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டதாகவும் பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இது ஒரு அப்பட்டமான பொய் மாத்திரமின்றி மக்களின் பொதுப் புத்தியினை அவமானப்படுத்துகின்ற செயலுமாகும்.
பொறுப்பற்ற இந்த கருத்தினை பாரளுமன்றத்தலேயே மறுதலித்து கண்டித்திருக்க வேண்டும். எனினும், நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதனை செய்யவுமில்லை.
இது இப்படியிருக்க, அமைச்சர்களுக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பலகோடிரூபா நிதி ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் மீண்டும் ஒரு முறை முயற்சிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காமல் பல வருடங்களாக தவிக்கும் நிலையில் அதே மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஆடம்பரங்களை அனுபவிக்க முனைவது ஒரு நம்பிக்கைத் துரோகமாகும் மட்டுமின்றி அப்பட்டமான ஒரு மக்கள் விரோத செயலுமாகும்.
அரசாங்கம் என்பது மக்களால் அந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. அந்தக் கடமையை செய்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் மக்கள் தமது ஆணையை வழங்குகிறார்கள்.
அந்த அடிப்படை நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் வகையில் இந்த அரசாங்கமும் நடந்து கொள்ள முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனவே, மக்களின் பணத்தை தமது அற்பத்தனதமான ஆடம்பர நோக்கங்களுக்கு பயன்படுத்துகின்ற மக்கள் விரோத செயற்பாட்டை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏனைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முறையான நஸ்ட ஈடுகளை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.