2020ஆம் ஆண்டில் சகலருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் குறிக்கோளுக்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில், மன்னார், எழுத்தூர் நீர் குடிநீர் வழங்கும் திட்டம் இன்று 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின்கீழ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தப்படும் உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் வழங்கல் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
2,200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கருத்திட்டம் பூர்த்தியடையும் போது 55 ஆயிரம் மக்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஸ்ரீ விடோவதி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே, முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.