Breaking
Sun. Nov 24th, 2024
இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அவசர விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்த இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தமது திருப்தியை வெளிப்படுத்திய இளவரசர், இலங்கையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் முதலீடு மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார்.

அந்த முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக வர்த்தக சமூகத்தவர்களுடன் தமது நாட்டுக்கு வருகை தருமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் மனங்கவரும் காலநிலை, பசுமை சுற்றாடல், வனப்பான கடற்கரைகள், வரலாற்று தளங்கள் போன்றவை சுற்றுலாத்துறையின் ஈர்ப்பை வென்றுள்ளதுடன், இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியா தொன்றுதொட்டே இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவியையும் பாராட்டினார்.

அத்துடன் சவுதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் நான்கு இலட்சம் இலங்கையர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு நல்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *