Breaking
Sun. Nov 24th, 2024

(ஊடகப்பிரிவு)
நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

95வது சர்வதேச கூட்டுறவுத் தின விழா குருணாகலில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டுறவு, அபிவிருத்தி, நோக்கு – 2020 என்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நவீன மறுசீரமைப்பு, கூட்டுறவுத்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும்.
கூட்டுறவுத்துறையானது இலங்கையின் 3வது பொருளாதார சக்தியாகத் திகழ்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

விவசாயத்துறை, பெண்களின் அபிவிருத்தி, காப்புறுதி, சிறிய மற்றும் நடுத்தர தொழில், கிராமிய வங்கி மற்றும் பல்வேறு வகையான உற்பத்திகள் அடங்கிய சுமார் 14500 கூட்டுறவுத்துறை சார் நிறுவனங்கள் நமது நாட்டில் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 46ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

நாட்டின் அதிகளவிலான உறுப்பினர்களைக் கொண்ட சந்தைமுறைமை கூட்டுறவுத்துறையிலேயே இருக்கின்றது.
இவர்களில் 56சதவீதத்தினர் பெண்களாகும். நவீனத்துவ குறைபாடு இளைஞர் விருப்புக் குறைவு, உட்கட்டமைப்புப் பற்றாக்குறை ஆகியவற்றினால் இந்தத் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது.

புதிய திட்டமானது இந்த விடயங்களை நிவர்த்தி செய்வதோடு, நவீன வர்த்தகத்தின் பால்; இந்தத் துறையை இட்டுச் செல்லுமென நம்புகின்றோம்.
நவீன தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்த வலையமைப்புக்குள் இளைஞர்களை உள்ளீர்ப்பு, செய்து விவசாயம் மற்றும் வேறு கூட்டுறவுத்துறை தொடர்பான விடயதானங்களை பலப்படுத்துவதற்கு புதிய மறுசீரமைப்புத் திட்டம் வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கு புதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம். பணியாட்;களின் போக்குவரத்து முறைமைகளை வலுப்படுத்துவதற்காக வாகனங்களை வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் லங்கா சதொசவின் செயற்பாடுகளை கூட்டுறவுத்துறையுடன் இணைத்து வர்த்தக நடவடிக்கைகளை வியாபிக்க திட்டமிட்டுள்ளோம்.

லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ள 8000ம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வர்த்தக நிலைய (பிரெஞ்சைஸ்) வலையமைப்புடன் கூட்டுறவுத்துறையின் பங்களிப்பையும் உள்வாங்கி நுகர்வோர் சேவையை பலப்படுத்த உள்ளோம்.

10வருடத்திற்கு முன்னரேயே புதிய கூட்டுறவுக் கொள்கையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நான் இத்துறையை பொறுப்பெடுத்த பின்னரேயே இந்த முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. அமைச்சு அதிகாரிகள் மற்றும் மாகாண அமைச்சர்களின் பங்களிப்புடன் இந்த முயற்சியில் வெற்றி கண்டோம். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

புதிய கூட்டுறவுக் கொள்கையின் மூலம் மத்தியிலுள்ள கூட்டுறவு நிர்வாகத்தை மையப்படுத்துவதோ அல்லது மாகாண கூட்டுறவுத் துறையை மலினப்படுத்தி மத்திய அரசு அதனை கையகப்படுத்துவதோ எமது நோக்கமல்ல. இந்தத் துறையை சக்தி மிக்கதாக ஆக்குவதுடன் அதன் தரத்தை மேம்படுத்தி வியாபாரத்தை உயர்த்தி நுகர்வோருக்கு நன்மை பெற்றுக்கொடுப்பதற்காகவே புதிய இலக்கை நோக்கி செயற்பட முனைந்துள்ளோம் என அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *