கொலை செய்யப்பட்ட பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் தொடர்பில் முதலில் பிரேத பரிசோதனை செய்த முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியும், சைட்டம் தனியார் கல்லூரியின் முன்னாள் உபவேந்தருமான வைத்தியர் ஆனந்த சமரசேகரவின் வைத்திய பதிவை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க இலங்கை வைத்திய சபை தீர்மனைத்துள்ளது.
வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் நீதிவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய ஆனந்த சமரசேகர மருத்துவ ஒழுக்க விதிமுறைகளை பேணி உள்ளாரா என ஆராயும் விதமாக விசாரணைகளை ஆரம்பித்த 7 பேர் கொண்ட மருத்துவ சபையின் சிறப்பு விசாரணைக் குழு, கடந்த ஆறு மாதங்களாக இது தொடர்பில் சாட்சி விசாரணைகளை நடாத்திய நிலையிலேயே ஆனந்த சமரசேகரவை குற்றவாளியாக கண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது தொடர்பில் அடுத்த வழக்குத் தவணையின் போது இலங்கை மருத்துவ சபை இந்த விசாரணை அறிக்கையை கொழும்பு மூன்றாம் இலக்க மேலதிக நீதிவானுக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய இலங்கை மருத்துவ சபை ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணைகளை நடாத்தியிருந்தது. இதன் போது மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆனந்த சமரசேகரவை மருத்துவ சபை விசாரணைக் குழு குற்றவாளியாக கண்டுள்ளது.
சரியானதொரு நடை முறை இன்றி பிரேத பரிசோதனை ஒன்றினை நடாத்தியமை, எலும்புத் துண்டுகள் காணாமல் போனமை, பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை ஆகிய மூன்று குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே ஆனந்த சமரசேகர வைத்தியர் என்ற பதிவினை 6 மாதங்களுக்கு இலங்கை மருத்துவ சபை ரத்து செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் எரியும் காருக்குள் இருந்து நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்துக்கு அருகில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் முதலில் அப்போதைய சட்ட வைத்திய அதிகாரி ஆனத்த சமரசேகர பிரேத பரிசோதனைகளை நடாத்தினார். இதன் போது வஸீம் தாஜுதீனின் மரணம் விபத்தால் ஏர்பட்டது என அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந் நிலையில் வஸீமின் சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டு தற்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி விஷேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் தலைமையிலான மூவர் கொண்ட குழுவினரால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதே வஸீம் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியானது.
முதலில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் போது மேலதிக சோதனைகளுக்கு என எடுக்கப்பட்ட வஸீமின் சில எலும்புகள் காணாமல் போயுள்ளமையும் தெரியவந்தது. இந் நிலையிலேயே முதல் பிரேத பரிசோதனையை முன்னெடுத்த வைத்தியர் ஆனந்த சமரசேகர வைத்திய ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய நடந்துகொண்டுள்ளாரா என்பதைக் கண்டறிய இலங்கை மருத்துவ சபை விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணைகளிலேயே மருத்துவ சபையால் ஆனந்த சமரசேகர தற்போது குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.