ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மகிழங்குளம் – பள்ளமடு வீதியினை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரினால் மக்கள் பாவனைக்காக 01.07.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 33 km நீளமான குறித்தவீதியில் 14 km வீதி 455 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
வீதியினை திறந்துவைத்து உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன்,
குறித்த நிகழ்வினை இரவு பகல் பாராது ஆயத்தம் செய்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தினருக்கும் அப்பகுதி கிராமமட்ட அமைப்புக்களுக்கும் நன்றியினை தெரிவித்து தனது உரையினை ஆரம்பித்தார்,
அதில் அவர் இன மத வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டாலே எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யமுடியுமென்றும், தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த வீதியின் மிகுதி I-Road திட்டத்தின் மூலம் புனரமைக்கப்ப்படுமெனவும் தெரிவித்தார். மேலும் ஒருபகுதியின் முன்னேற்றத்துக்கு குறிப்பாக அங்கு விளைவிக்கப்படும் அல்லது உற்பத்திசெய்யப்படும் பொருட்களை கொண்டுசென்று சந்தைவாய்ப்பினை பெறுவதற்கு வீதிகள் தரமானதாக இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் வடமாகாணம் முழுவதும் ஏறக்குறைய 1150 km வீதிகள் I-Road திட்டத்தின்மூலம் கப்பர்ட் வீதிகளாக புனரமைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் அவை ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக வடமாகாண அரசியலில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண நிலைமை பல பின்னடைவுகளுக்கு காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டியதோடு வடமாகணத்தில் சிறுபான்மையாக வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்திற்காக தன்மீது குற்றம்சுமத்தப்படுள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார் மேலும் வேறு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் இவ்வாறு சிந்திக்கின்றார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு இன மத வேறுபாடுகளுடன் அமைச்சர் என்ற வகையில் தாம் ஒருபோதும் சேவை செய்யப்போவதில்லை என்பதனையும் எடுத்துரைத்தார்.
மேலும் மாவட்டம் சார்ந்த அபிவிருத்திகளை தான் முன்னெடுத்துள்ளதாகவும் நாயாத்துவெளி பகுதியில் வரவிருக்கின்ற மீன்பிடி பண்ணைக்காக ஏறக்குறைய 1000 ஏக்கர்கள் தமது அமைச்சுக்கு ஒதுக்கப்படுள்தாகவும் அதில் ஏறக்குறைய 4100 மில்லியன் ரூபா செலவில் பாரிய மீன்பிடி பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் 3 வருடங்களுக்குள் அதன் பணிகள் நிறைவுபெற்று 5000 வரையிலான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
மேலும் தன்னால் நன்னீர் குளங்களில் விடப்பட்ட மீன்குஞ்சுகள் மற்றும் இறால் மூலம் மீனவர்கள் அதிகமான இலாபம் பெறுவதாகவும் ஒரு கிலோ இறால் 1200 ரூபாய்கள் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காடினர்.
பின்னர் உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் அமைச்சர் டெனிஸ்வரன் ஒரு இணக்க அரசியல்வாதி எனவும் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியதோடு மட்டக்களப்பில் அமைக்கப்படவேண்டிய மீன்பிடி பண்ணையை அப்பகுதி அரசியல்வாதிகள் நிராகரித்த நிலையில் தனது பிரதேசத்தில் அமைந்தால் அது எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் என அறிந்து அவர் அதனை பல சிரமங்களின் மத்தியில் மன்னாருக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு அரசியல்வாதிமேல் ஆதாரமற்ற நிலையில் குற்றம் சுமத்துவது அவர்களின் மனதினை புண்படுத்துவதோடு அவர்களின் பணிகளிலும் பின்னடைவை ஏற்ப்படுத்தும் என சுட்டிக்காட்டியதோடு அவ்வாறு யாரும் செயற்படக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.