(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
குற்றச் சாட்டு – 01
எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
பதில்
ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால் ஒரு ஊடக குழு வழங்கப்படும். அவர்கள் நேரம், காலம் பார்த்தே வேலை செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால் வீடியோவும், புகைப்படம் எடுப்பதையுமே அவர்களது தொழிலாக கருதுவர். அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாற்ற முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை. இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்கின்ற வேலையுமல்ல. தற்போது அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் அரசு வழங்கும் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமான ஊடக செயற்பாட்டாளர்களின் தேவை உள்ளமை மறுதலிக்க முடியாத உண்மை. இச் சிறு விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் விமர்சித்திருப்பதானது அவரது சிறு பிள்ளைத் தனமான பேச்சை காட்டுக்கிறது.
இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோர் அனைவரையும் அவர் பணம் கொடுத்தே பேச வைக்கின்றார் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இன்று சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோருக்கு எல்லாம் பணம் வழங்குவதானால் மாதமொன்றுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. அது ஒரு அமைச்சருக்கு சாத்தியமற்ற விடயம். வை.எல்.எஸ் ஹமீத் தனது இக் கூற்றினூடாக தனக்கு மிகப் பெரும் எதிர்ப்புக்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக வழங்கியதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார். இதனை எதிர்ப்பாக வெளிக்காட்டினால் தனது மரியாதை போய் விடும் என்பதால் அவர்களை கூலியாட்களாக சித்தரித்து மக்களை வேறு பக்கம் திசை திருப்ப முயல்கிறார்.
அமைச்சர் றிஷாதுக்கென்று ஒரு கட்சி உள்ளது. அவரோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அமைச்சராக இருப்பதால் பலருக்கு சேவையாற்றி இருப்பார். இவைகளின் காரணமாக அவரை யாராவது இகழ்ந்தால் அவரை நோக்கி சொல் அம்புகள் வருவது தவிர்க்க முடியாத விடயமாகும். அச் சொல் அம்புகளை எதிர்கொள்ளுமளவு வா.எல்.எஸ் ஹமீதுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அவைகள் பெரிதாக தெரியாது. தற்போது வை.எல்.எஸ் ஹமீதை மக்கள் ஆதரிக்காததன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதை நோக்கி வரும் அம்புகள் வை.எல்.எஸ் நேரடியாக தாக்குவதால் இவ்வாறான சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாததும் கூட. “அதனால் தான் இப்படியோ” என சிந்திப்பது தான் மனித சிந்தனையும் கூட.
அமைச்சர் றிஷாத் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கு எல்லாம் பணம் வழங்குகின்றார் என்றால் அதனை வை.எல்.எஸ் ஹமீத் ஆதாரங்களோடு நிரூபிப்பாரா? பெருந்தொகை பணம் என்றால் அது எவ்வளவு? யாருக்கு? வை.எல்.எஸ் ஹமீதுக்கு தெரிந்தால் ஏன் இத்தனை தயக்கம்? இத்தனை காலமும் அமைச்சர் றிஷாதின் கோட்டைக்குள் உறங்கியவருக்கு இது ஒன்றும் பெரிய விடயமுமல்ல. அவ்வாறு எதனையும் நிரூபணம் செய்யாது தண்ணீரில் எழுதி விளையாடுவதன் மர்மம் என்ன?
குற்றச் சாட்டு – 02
அமைச்சர் றிஷாத் அணியினர் தான் தேசியப்பட்டியல் கிடைக்காமையால் தான் இவ்வாறு கூவித் திரிவதாக எவ்வாறு கூற முடியும்?
பதில்
வை.எல்.எஸ் ஹமீதுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் உள்ள பிரச்சினை தேசியப்பட்டியல் பிரச்சினை என்பதில் எவ்வித சிறு சந்தேகமுமில்லை. இதனை பல விடயங்களை கொண்டு நிறுவல்களை அமைக்கலாம். இன்று வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் இன்று நேற்று நடந்தவையல்ல. அவர் கட்சியில் இருக்கும் போது நடந்தவைகளே. அக் காலத்தில் இது தொடர்பில் அவர் எங்கும் பேசியதாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று ரங்காவுடன் இணைந்து அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் வை.எல்.எஸ் ஹமீத் அன்று ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதை விமர்சிக்கின்றார் என்பதற்கு நியாயம் கற்பித்தவர். இவ்வாறானவர் திடீர் என அமைச்சர் றிஷாதை விமர்சித்தால் அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்.
அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிக நிதானமான கருத்தையே கூறி வந்தார். இல்லை.. இல்லை.. அவர் என்னை இப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என வை.எல்.எஸ் ஹமீதால் ஒன்றையேனும் காட்ட முடியாது. வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது முன் வைப்பதெல்லாம் போலி முகநூல்களில் வெளியாகிய செய்திகளைத் தான். போலி முகநூல் செய்திகள் ஆயிரம் வரும். அதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முடியுமா? வை.எல்.எஸ் குற்றம் சுமத்தும் குறித்த முக நூல் பதிவுகள் கூட இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் தோன்றிய ஆரம்ப காலத்தில் தான் பதவிடப்பட்டிருந்தன. அதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை இகழ்ந்த போதே தாக்க தொடங்கினர். இன்றைய பதிவில் வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றி பதிவிட்டிருந்தார். யாரோ விமர்சித்தமைக்காக அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்களை கூட விமர்சித்த வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர். எனவே, இன்று இவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் அநாகரிகமாக நடந்து கொண்டவர் வை.எல்.எஸ் ஹமீத் தான்.