Breaking
Sat. Nov 23rd, 2024
(எஸ். ஹமீத்)
இந்தக் கட்டுரையாளருக்குக் கடந்த ஆட்சியில் மிக அதிகமான வெறுப்பு இருந்தது. முஸ்லிம் சமூகத்துக்கெதிராகத் திடீரென முளைத்தெழுந்த பொது பல சேனாவின் அட்டகாசங்களும் அட்டூழியங்களும் கடந்த ஆட்சியாளர்களினால் கண்டும் காணாது விடப்பட்ட போதும், அந்தப் பொது பல சேனாவை உருவாக்கி ஊட்டி வளர்ப்பவர் கோத்தபாய ராஜபக்ஷவே என்னும் சந்தேகம் வலுவடைந்த போதும், அப்போதைய ஆட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ தனது மறைமுகமான ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பொது பல சேனாவுக்கு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு மறுதலிக்கப்படாமலிருந்த போதும் பல கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதிப் பரப்புரை செய்த இந்தக் கட்டுரையாளர், மைத்திரியின் அரசாங்கம் அமைந்த ஆரம்ப காலங்களில் அந்த அரசாங்கத்துக்குப் புகழ் மாலைகளையும் சூட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால், இன்றைய இந்த அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் மகிந்த அரசாங்கத்துக் காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைவிட மிக அதிகமாகவே நிகழ்த்தப்படுதல் கண்டு  இக்கட்டுரையாளரின் இதயம்  மட்டுமன்றி, இனிப் பேரினவாதக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாமெனக் கனவுகளிலும் கற்பனைகளிலும் ஆழ்ந்திருந்த முழு முஸ்லிம் சமூகத்தின் இதயங்களும் மிக்க வேதனைகளோடும் விரக்திகளோடும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றன.
நமதிந்த நிலைமையைப் பல பழமொழிகள் மூலம் பறை சாற்றலாம். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல…சட்டிக்குள்ளிருந்து நெருப்புக்குள் விழுந்தவனைப் போல…நரியூருக்குப் பயந்து புலியூருக்குள் நுழைந்தவனைப் போல….என்பவை அவற்றிற் சில.  இத்தோடு, ‘மகிந்தவுக்குப் பயந்து மைத்திரியை அரியாசனம் ஏற்றியது போல…’ என்ற ஒரு  நவீன மொழியும் நமது வரலாறுகளில் பதியப்பட்டுவிடுமோ என்று தற்போது நினைக்கத் தோன்றுகிறது. அந்தளவுக்குக் கடந்த ஆட்சியில் நாம் அனுபவித்த இனவாதக் கொடுமைகளை விஞ்சும் வண்ணம் தற்போது நமக்கெதிரான கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மிக அண்மைக் காலங்களாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியின் போது முஸ்லிம் சமூகத்திற்குக் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பகிரங்கமாகவும் அடிக்கடியும் ஒப்புக் கொள்கிறார். அதற்காக வருந்துகிறார். மன்னிப்பும் கேட்கிறார். முஸ்லிம்களோடு நட்பையும் நல்லிணக்கத்தையும் வளர்த்துக் கொள்வதற்குத் தான் மிகுந்த  ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார். அது மாத்திரமன்றி, கடந்த அரசாங்க காலத்தில் பொது பல சேனாவைத் தடை செய்வதற்கும் ஞானசார தேரோ போன்றவர்களின் மீது நடவடிக்கையெடுப்பதற்கும் தனது அரசாங்கத்துக்குள்ளிருந்து பலத்த எதிர்ப்பை வெளியிட்ட சம்பிக்க ரணவக்க போன்றோர் இன்றைய ஆட்சியின் அசைக்க முடியாத சக்திகளாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறே, அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் கூறுகிறார்.

இது இவ்விதமிருக்க, நமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய இனவாத அட்டூழியங்களெக்கெதிராகப் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பொதுவெளியிலும் மிக உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நமது சிவில் சமூகத்துப் புத்திஜீவிகளும் தமது எதிர்ப்பைப் பல்வேறு தளங்களிலும் பதிவு செய்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனாலும், இந்த அரசாங்கம் எதனையும் செவிமடுக்காத நிலையில் வெறும் சால்ஜாப்புச் சொல்லிக் கொண்டு போகிறதேயொழிய இனவாதத்தையோ, இனவாதிகளையோ தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியாக நாமனைவரும் ஒன்றாயிணைந்து கொண்டு வந்த அதியுத்தம ஜனாதிபதியின் சமீப காலப் பேச்சுகளும் செயற்பாடுகளும் ஞானசார தேரர்  போன்ற இனவாதிகளுக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவுமே இருந்து வருகிறது. இன்று கூட ”சமூக வலைத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒரு போதும்  அனுமதிக்கப் போவதில்லை!” என்று நமது ஜனாதிபதி ஆவேசமாகப் பேசுகிறார்.  தேரர்கள் தேரர்களாக இருந்தால் யாரும் ஏன் குறை சொல்லப் போகிறார்கள்….? சில தேரர்கள் விஷம் கக்கும் தேரைகளாகவல்லவா இருக்கிறார்கள். இந்த விஷத் தேரைகளுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் நமது சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வன்கொடுமைகளுக்கு ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்குகின்றாரா.?

ஞானசாரரின் கைது விடயத்தில் கூட, நீதவான் கவலையும் கோபமும் அடையும் அளவுக்குப் போலீசார் ‘பல்டி’ அடித்திருக்கிறார்கள். முன்னர் கொடுத்த அறிக்கையை வாபஸ் வாங்கிப் புதிய அறிக்கையைக் கொடுத்து ஞானசாரர் பிணையில் செல்ல  வழிவகுத்திருக்கிறார்கள். இவ்வாறு செய்யும்படிப் பொலிஸாரைப் பணிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடத்திலன்றி வேறு எவரிடம்தான் இருக்கும்?

அதுமட்டுமல்லாது, இனவாதிகளைப் போஷித்துக் காக்கும் நடவடிக்கைகளில் இன்றைய நீதிக்குப் பொறுப்பான அமைச்சரும் வேறு சிலரும்  மிக மும்முரமாக ஈடுபடுவதையும்  நாம் அவதானிக்கவே செய்கிறோம். ஆனால், இவர்களையெல்லாம் ஜனாதிபதி கடிந்து கொண்டதாவோ, தட்டிக் கேட்டதாகவோ எந்தவொரு செய்திதானும் இதுவரை இல்லை.

இவற்றையெல்லாம் அவதானிக்கையில் நமது சமூகம் ஏமாற்றப்பட்டு விட்டமை புரிகிறதல்லவா…? நாமே கொண்டு வந்த நமக்கான ஜனாதிபதி நம்மை நம்ப  வைத்து நாடகமாடியிருக்கிறார் என்பது விளங்குகிறதல்லவா…? நாம் ஏற்கனவே சொன்ன அத்தனை பழமொழிகளும் நமது விடயத்தில் மிகக் கச்சிதமாகப் பொருந்துகின்றன, இல்லையா.?

ஒருபுறம்,  முன்னர் தமது ஆட்சியில் நடந்த மோசமான சம்பவங்களுக்காக வருந்திப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் முன்னாள் ஜனாதிபதி. இன்னொரு புறம், இனவாதத்தை இந்நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பேன் என வாக்குறுதி தந்து இன்று வாய்ச்சொல் மாறி, ஞானசார போன்ற தேரர்களுக்குச் சாமரம் வீசுவதன் மூலம் நமது சமூகத்துக்கு நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்ட இன்றைய ஜனாதிபதி.
நாம் என்ன தான் செய்யப் போகிறோம்?

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *