(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு காலம் என்பதால் அரசியல் பதிவுகளை தவிர்க்க முயற்சித்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தாக்கம் அவரது கட்டுப்பாட்டையும் மீற வைத்துள்ளதாக கூறி தனது பதிவை ஆரம்பம் செய்கிறார்.
நோன்பு காலத்தில் அரசியல் கதைக்க கூடாது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இஸ்லாத்தில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அரசியல் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்துக்குள்ள சிறப்பு எந்த விடயமாக இருந்தாலும் உளத் தூய்மையோடு செயல்பட்டால் அதனூடாக நன்மையை பெற்றுக்கொள்ள முடியும். உளத் தூய்மை அற்ற செயற்பாடுகளே பாவத்தின் பால் வழி காட்டும். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த தனது கருத்தின் ஊடாக அவருக்கு இஸ்லாம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது நோன்பு காலத்தில் மனச் சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளை செய்து பாவம் சம்பாதிக்க கூடாது என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவ்விரண்டில் அவர் எதனை ஏற்றுக்கொண்டாலும் அது அவருக்கு இழிவையே கொண்டு சேர்க்கும்.
அவர் முன் வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை பகுதி பகுதியாக பிரித்து எனது விமர்சனத்தை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அவரது குற்றச் சாட்டில் எங்கும் அமைச்சர் ரிஷாத்தின் பெயர் குறிப்பிடப்படாதிருப்பினும் இப் பதிவு அவரை நோக்கியது என்பதை சிறு பிள்ளையும் அறியும் என்பதால் அமைச்சர் றிஷாதை நேரடியாக அவர் குறிப்பிட்டார் என கருதி எனது அவரது வினாக்களை அமைச்சர் றிஷாதை நோக்கியதாக அமைத்துள்ளேன். ஒரு நிகழ்வில் ஒரு அமைச்சர் இப்படி பேசினார் என அவரது பெயரை மறைத்து விமர்சனம் செய்வதானால் அவரது குறித்த கருத்து மாத்திரமே விமர்சிக்கப்படல் வேண்டும். அவர் பற்றிய வேறு விடயங்களை விமர்சிப்பதானால் அவர் பெயர் வெளியிடப்பாடல் வேண்டும். ஏனெனில், குறித்த பதிவை அரசியல் தொடர்புடையவர்கள், இவர் தான் என அடையாளம் கண்டு கொண்டாலும் அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பற்றவர்கள் யாரை விமர்சிக்கின்றார் என அறிய மாட்டார்கள். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த விடயத்தையும் கவனத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும்.
குற்றச் சாட்டு – 01
அரசின் பங்காளியாக இருக்கின்ற அமைச்சர் றிஷாத் ஏன் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடுமையாக அரசை சாட வேண்டும்?
பதில்:
பதில் வழங்க முன்பு வை.எல்.எஸ் ஹமீத் இங்கு பயன்படுத்தியுள்ள வார்த்தை பிரயோகம் மிகவும் கவனம் செலுத்தக் கூடியது. இங்கு அமைச்சர் றிஷாத் கடுமையாக அரசை சாடுவதாக வை.எல்.எஸ் ஹமீத் குறிப்பிடுகிறார். கடுமையாக எனும் வார்த்தை பிரயோகமானது அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் வை.எல்.எஸ் ஹமீதினதும் உள்ளத்தை தொட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. அல்லாது போனால் அரசை சாடிப் பேசியுள்ளார் என சாதாரண ஒரு விடயமாக அவர் கூறியிருக்கலாம். அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் முஸ்லிம் மக்களிடையே மிகவும் பலமான பேசு பொருளாகவும் அவரது செல்வாக்கை உயர்த்தும் ஒன்றாகவும் மாறியுள்ளதால் அந்த செல்வாக்கை தனது இவ்வினவினூடாக உடைக்க முயல்கிறார் என்ற விடயமே இதனூடாக தெளிவாகிறது.
இப்போது விடயத்துக்குள் நுழைவோம். இன்றைய சூழ் நிலையில் தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளே பிரதானமானதாகும். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசும் போது முஸ்லிம்களின் எதிர்ப்பலைகள் இவ்வரசின் மீது அதிகரிக்க தொடங்கும். மிக விரைவில் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சர் றிஷாதின் இவ்வாறான பேச்சுக்கள் அரசின் தொடர்ச்சியான இருப்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவார். இன்றைய நிலையில் அமைச்சர் றிஷாத் தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு செல்வதே அவரது வளர்ச்சிப் படிகளுக்கு உகந்தது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே அமைச்சர் றிஷாத் பேசிக்கொண்டிருக்கின்றார். அமைச்சர் றிஷாத் இவ்வரசை சாடிப் பேசுவதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அமைச்சர் றிஷாத் அரசின் பங்காளியாக இருந்து கொண்டு இதனை கூறலாமா என்ற பகுதியானது ஆழமான சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். எப்படியானாலும் அரிசானால் சரி. அரசியல் பல வகைப்படும். உடன்பாட்டு அரசியல்,முரண்பாட்டு அரசியல், ஒப்பந்த அரசியல் என அவற்றை பிரிக்கலாம். இதில் இன்று அமைச்சர் றிஷாத் கடைப்பிடித்து கொண்டிருப்பது முரண்பாட்டு அரசியல் பாணியாகும் (வை.எல்.எஸ் ஹமீத் , அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக சாடுகிறார் என கூறுவதன் மூலம் இதனை ). இந்த முரண்பாட்டு அரசியல் பாணியை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போரே அதிகம் செய்வர். ஆனால்,அது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தே செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சியிலும் இருந்தும் செய்யலாம். ஆளும் கட்சிக்குள் அவர்களது பதவிகளில் இருந்து கொண்டு முரண்பாட்டு அரசியல் பாணியை கடைப்பிடிக்க அலாதித் துணிவு வேண்டும். அது பலருக்கு இருப்பதில்லை.
அமைச்சர் றிஷாத் மாத்திரம் எதிர்க்கட்சியில் அமர்வதால் எதனையும் அவரால் சாதிக்க முடியாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். எதிர்க்கட்சி என்றாலே அரசை விமர்சிப்பது அதன் பண்பு. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் அரசி விமர்சிப்பாராக இருந்தால் அவர் எதிர்க்கட்சியில் இருந்து என்ன செய்வாரோ அதனையும் செய்கிறார் அதன் பலா பலன்களையும் அனுபவிக்கின்றார். மேலும், ஆளும் கட்சியில் இருந்தவாறு ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது அவ் விமர்சனம் உண்மை வடிவம் பெறும். இப்பகுதியை இன்னும் நீளமாக அழுத்தலாம் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன்.
எனது வினா?
அளுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாதுடனேயே இருந்தார். அப்போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாத் இவ்வரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு அறிக்கையாவது விட்டாரா என்பதாகும்.
குற்றச் சாட்டு – 02
பொது மக்களும் அரசுக்குத் தான் ஏசுகிறார்கள். இவர்களும் பொது மக்களிடம் வந்து அரசுக்கு ஏசுவதானால் எதற்கு பொது மக்கள் இவர்களை தெரிவு செய்தார்கள்?
பதில்
அமைச்சர் றிஷாத் பொது மக்களிடம் மாத்திரம் இவ்வரசை விமர்சிக்கவில்லை. பாராளுமன்றத்துக்குள் பொது பல சேனாவின் செயலாளரை கைது செய்ததை நாடகம் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு பொது மகன் கதைக்கும் விடயங்கள் இவ்வரசின் ஆட்சியாளர்களை சென்றடைவதில்லை. அதே நேரம் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் வாதி கதைக்கும் போது அது மிக விரைவாக இவ்வாட்சியாலர்களை சென்றடையும். அதுவே சாதாரண பொது மகன் அரசுக்கு ஏசுவதற்கும் ஒரு மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் வாதி மக்களிடம் வந்து அரசை விமர்சிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.
இவ்வரசை இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைத்திருப்பதால் அமைச்சர் றிஷாத் வெறும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பொது மக்களிடம் சென்று அரசை விமர்சிக்கும் போது பொது மக்கள் அரசின் மீது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவர். இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்கே பிரதானமானதாகும். இதன் காரணமாக அமைச்சர் றிஷாத் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதை விட இவ்வாறான பிரச்சாரமே இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிகம் தாக்கம் செலுத்தும்.
இப் பகுதியில் வை.எல்.எஸ் ஹமீதின் பதிவின் முதல் இரண்டு பந்திகளுக்குமான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகள் இன் ஸா அல்லாஹ்
தொடரும்…