Breaking
Tue. Nov 26th, 2024
(சுஐப் எம் காசிம்)
 

“நாங்கள் எதிர்ப்பில்லை – பிணை கொடுங்கள்!, பிணை கொடுங்கள்” என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாசகாரி ஒருவருக்காக பொலிசார் மன்றில் கெஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் கபடத்தனமான செயலொன்று இந்த நல்லாட்சியில் அரங்கேறி முடிந்திருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் கெகுணுகொல்ல சதகா நிறுவனம் அரக்கியால பிரதேசத்தில் நேற்று மாலை (23.06.2017) ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது:

சட்டத்துறை வரலாற்றிலோ நீதித்துறை வரலாற்றிலோ உலகெங்கணுமே இற்றைவரை காணாத இந்த கேவலமான சம்பவத்தினால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அந்த துறைகளின் மீது நம்பிக்கையிழந்து அச்சத்துடனும் பீதியுடனும் வாழும் ஆபத்தான சூழல் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் நமது சமூகத்தின் சுயாதீன வாழ்வு, சுதந்திரமான நடமாட்டம், பாதுகாப்பு அத்தனையுமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

குற்றவாளி ஒருவருக்காக பரிந்து பேசி, இனவாதி ஒருவரை சட்டத்தின் பிடியில் இருந்து அதன் பாதுகாவலர்கள் தப்ப வைத்திருக்கின்றார்கள். நீதியும் நியாயமும் செத்திருக்கின்றது.

கடந்த ஒருமாத காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் சுமார் 1.5 பில்லியன் சொத்துக்களை அழித்தும் பள்ளிவாசல்களை குண்டெறிந்து தாக்கியும் அல்லாஹ்வையும் அவனது அருட்கொடையான குர்ஆனையும் இறைதூதரையும் கொச்சைப்படுத்தியும் முஸ்லிம் உம்மத்துக்களை கொடுமைப்படுத்தியும் வந்த சூத்திரதாரி ஒருவரை பொலிசாரே பாதுகாத்திருப்பது தொடர்பில் நல்லாட்சித் தலைவர்களான இருவரும் நமக்கு பதில் சொல்லியேயாக வேண்டும்.

இன்னும் எத்தனை பில்லியன் சொத்துக்கள் அழிந்தாலும் இறைவனையும் இறை தூதரையும் இறைமறையையும் எப்படிக் கொச்சைப்படுத்தினாலும் நீங்கள் பேசாமடந்தைகளாகவே இருக்க வேண்டும் எனவும் சட்டமும் ஒழுங்கும் தொடர்ந்தும் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் எனவுமே நடந்து முடிந்த சம்பவங்கள் நமக்குத் துல்லியமாக தெளிவுபடுத்துகின்றன. நமது ஒற்றுமையின் மூலமும் பிரார்த்தனையின் வழியாகவும் இறை நீதியைக் கொண்டே இந்த அராஜக செயற்பாடுகளை நிறுத்த முடியும் என்பதை இப்போது முஸ்லிம் சமூகம் உணரத்தொடங்கி விட்டது. சட்டம் தனது கடமையில் இருந்து தவறி, சூத்திரதாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் கேவலச் செயலுக்காக முழுப் பொறுப்பையும் இந்த அரசு ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

முஸ்லிம் சமூகம் இன்று சவால் மிகுந்த கால கட்டத்தில் பல்வேறு போராட்டங்களுடன் வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்துக்கு முன்னரோ சுதந்திரத்துக்கு பின்னரோ நாட்டின் இறைமைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத, இஸ்லாமிய வழியில் அமைதி, சமாதானத்துடன் சகவாழ்வை மையமாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். ஆட்சிக்கு வந்த எந்த அரசுடனும் எங்கள் சமூகம் இணைந்து பயணித்து இயைபாக்கம் பெற்று வாழ்ந்து வருவதே வரலாறு.

நாட்டின் சொத்துக்களுக்கோ இயற்கை வளங்களுக்கோ நஷ்டத்தை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சகோதர இனத்துடன் முட்டி மோதவிடும் ஒரு சதியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஓர் இனவாதக் கூட்டம் இன்னும் தமது காட்டுமிராண்டித்தனமான செயலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அநியாயக்காரர்களை அடக்குவதற்காக கடந்த அரசு தவறிழைத்தமைக்காகவே புது அரசை தோற்றுவித்தோம். நல்லாட்சி அரசு நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் என்று கனவு கண்டோம்.

அமைதியான சூழலை ஏற்படுத்தி எமது மார்க்கக் கடமைகளை அனுசரிக்க வழி செய்வார்கள் என்று மலைபோல் நம்பினோம். எமது கல்வியும் சொத்தும் பாதுகாக்கப்படும் என்று கனவு கண்டோம். எனினும் இந்த நல்லாட்சியில் எமது நம்பிக்கைகள் தகர்ந்து பாழாகிக் கொண்டிருக்கின்றன. நாம் பொறுமையின் உச்ச எல்லையை விஞ்சி நிற்கின்றோம்.

இவ்வாறான அக்கிரமங்களையும் அநியாயங்களையம் மிலேச்சத்தனமான செயற்பாடுகளையும் அரங்கேற்றி வரும் நாசகார கூட்டத்தை கட்டுப்படுத்துமாறும் அடக்குமாறும் கைது செய்யுமாறும் ஆட்சித்தலைமையிடமும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டியவர்களிடமும் முறையிட்டோம். ஆனால் அதற்கு மாற்றமாக பாதிக்கப்பட்ட சமூகத்துக்காக குரல் கொடுக்கும், அதனைத் தட்டிக் கேட்கும் எம்மை இனவாதிகள் என்றும் மதவாதிகள் என்றும் முத்திரை குத்தி வருகின்றனர். சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன. இந்த அட்டூழியங்களின் சூத்திரதாரி ஞானசாரரை கைது செய்யுமாறு நாங்கள் முறையிட்டதன் பிரதிபலிப்பாக எம்மையும் அழைத்து விசாரிக்கும் அளவுக்கு சட்டம் பலவீனமாகிவிட்டது. அந்தத் தேரரை கைது செய்யுமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒருமித்து ஆட்சித் தலைமைகளிடம் வலியுறுத்தினோம்.

பொலிசில் நாங்கள் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்ததற்காக இப்போது முறைப்பாட்டைச் செய்தவர்களில் ஒருவரான என்னையும் அழைத்து விசாரிக்கப் போவதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இனவாதத்ததை விதைப்பதற்காகவே என்மீதான இந்த விசாரணை என்று அந்த பொலிஸ உயர் அதிகாரி வியாக்கியானமும் வழங்கியுள்ளார். சட்டத்தினதும் ஒழுங்கினதும் இலட்சணம் இவ்வாறு மாறி இருக்கின்றது.

சட்டத்தின் காவலர்கள் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் 30 வருடப் பேரழிவில் இருந்து நாம் காப்பற்றப்பட்டிருப்போம். அதன் பிரதிபலிப்பு பல்லாண்டு காலமாக வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாக அலையும் துர்ப்பாக்கியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நாட்டில் இரத்த ஆறு ஏற்படவும் வழிவகுத்தது என்பதை நான் மிகவும் வேதனையுடன் கூற விரும்புகின்றேன்.
எவரைப்பிடிக்க வேண்டும்? எந்த இடத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்? எங்கே தவறு இருக்கின்றது? என்பவற்றை தெளிவாகத் தெரிந்து கொண்டும் அதனை வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தாமல் பொலிசார் அசமந்தப்போக்கையே கடைப்பிடிப்பதாக நாங்கள் பல முறை குற்றஞ்சாட்டி வருகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை பொருட்டாகக் கருதவில்லை. நடந்து முடிந்த சம்பவங்கள் மூலம் எமது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிசார் தமது நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு பாரிய அநீதியை விளைவித்துள்ளார்கள் என்பதை நான் இங்கு மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.      
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *