Breaking
Wed. Nov 27th, 2024

ஒரு அரச தலைவரின் அனுமதியுடன் செய்ய முடியுமான வேலைகளை இன்னுமொருவரின் சதியாக குறிப்பிடுவது நகைப்புக்குரியதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இன்று இலங்கை நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகச் சிறிய ஆதரவுடைய குழுவொன்றினால் மிகப் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என்ற உண்மை யாராலும் மறுக்க முடியாததாகும். இன்று குறித்த நபர்கள் யாரின் கீழ் இருந்து செயற்படுகிறார்கள் என்பதற்கு தற்போது நடக்கும் விடயங்களை ஆதாரமாக குறிப்பிடலாம்.

எமது காலத்திலும் சில இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றாலும் அவைகளுக்கு அன்று நாம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. அதற்காகவே முஸ்லிம்கள் சமூகம் எங்களோடு முரண்பட்டது. இருப்பினும் தெளிவான உண்மைகளை அறிந்த முஸ்லிம்கள் பலர் எம்மோடு இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சில செயற்பாடுகள் அரச அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்பதால் தற்போது இடம்பெறும் இனவாத செயல்களின் பின்னால் இவ்வாட்சியாளர்கள் இருக்க வேண்டும்.

வில்பத்து வர்த்தமானியை எடுத்து கொண்டால் அதற்கு ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும். மாணிக்கமாடு விகாரை அமைத்தலில் பல அரச அனுமதிகள் வேண்டும். பேரீத்தம் பழத்தின் வரியை அதிகரிக்க நிதி அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும். கல்முனை, சாய்ந்தமருதில் அமையப்பெற்றிருந்த நிறுவனங்களை அம்பாறைக்கு இடமாற்ற குறித்த அமைச்சர்களது அனுமதி வேண்டும். இப்படி இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளுக்கு அரச அனுமதி வேண்டும் என்பதற்கு பல ஆதாரங்களை குறிப்பிடலாம்.

இவ்வாறான நிலையில் நேற்று 20-06-2017ம் திகதி செவ்வாய்க் கிழமை ஜனாதியின் இப்தார் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தன்னையும் முஸ்லிம்களையும் பிரிக்க சதி இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார். அதனை முஸ்லிம் அரசியல் வாதிகளும் கேட்டுக்கொண்டிருந்ததோடு உணவருந்தியும் வந்துள்ளனர். இவ்வாறான அரச அனுமதிகளுடனான வேலைகளை சாதாரண ஒரு குழுவால் ஒரு போதும் செய்ய முடியாது. அது மாத்திரமின்றி ஞானசார தேரர் விடயத்தில் பொலிசார் மற்றும் நீதித்துறை நடந்துகொள்ளும் விதத்தையும் பார்க்கும் போது இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதையும்ம் மக்களால் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

இன்று இந்த இனவாதிகளை இயக்குபவர்களாக பெயர் சுட்டிக்காட்டப்படுபவர்கள் அனைவரும் இவ்வரசின் முக்கிய இடத்தில் உள்ளவர்கள். இவ்வாட்சியின் முக்கியஸ்தர்கள் என்றால் அவர்களை ஜனாதிபதியினது நெருங்கிய சாகாக்கள் என்ற கோணத்திலும் நோக்கலாம்.

ஜனாதிபதி இனவாதிகளின் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பதோடு முஸ்லிம்களையும் இணைத்து செல்ல இவ்வாறான நாடகமாடுகிறார். அதனை முஸ்லிம் சமூகம் நன்கு அறிந்து கொண்டு இம்முறை ஜனாதிபதியின் இப்தாரை புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் முன் வைத்ததை சமூக வலைத் தளங்களினூடாக அவதானிக்க முடிந்ததோடு எங்களுடைய இப்தார் நிகழ்வுக்கு அரசியல் நோக்கம் கொண்டே தவிர வேறு எந்த வகையான எதிர்ப்புக்களையும் முஸ்லிம்கள் சமூகம் வழங்கவில்லை என்பது மகிழ்வை தருகிறது. இவ்விடயமானது முஸ்லிம்கள் எங்களை பற்றி நன்கு அறிந்து கொண்டார்கள் என்ற நல்ல செய்தியை கூறிச் செல்கிறது என அவரது ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *