(கலைமகன் ஹுதா உமர்)
முஸ்லிங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய பேரினசக்திகளின் தீவிரவாத செயலை மறக்கடிக்க இயக்கப்பட்ட நாடகம் மிக அதிநாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை நாங்கள் எண்ணி மிக கவலையடைகின்றோம்.
முஸ்லிங்கள் அதிகமாக வாழும் இறக்காமப்பிரதேசத்தில் கொல்லிமலை பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை அகற்றப்படும் என முஸ்லிங்களின் குரலாக ஒலிக்கும்தலைவரும் சட்டமுதுமாணியுமான (போராளிகள் இப்படித்தான் அழைக்கிறார்கள்.)அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்களிடம் கௌரவ பிரதமர் அவர்களும், அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வாக்குறுதி அளித்திருந்ததை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நல்லாட்சி அரசின் கேபினட் அமைச்சருமான சட்டமுதுமாணி,அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்கள் வானூர்தி மூலம் இறக்காம பள்ளிவாசலுக்கு அவசர அவசரமாக வந்து மக்கள் முன்னிலையில் தெரிவித்துவிட்டு சென்றார். (சில நாட்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் ஹீரோவாக பார்க்கப்பட்டார் .
)
வில்பத்து பிரதேசத்தில்பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த காணிகளை சில விஷமிகளின் சதியால் ஜனாதிபதி காடாக வர்த்தகமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்தவுடன் தமது காணிகளை மீட்டுத்தர வேண்டும் என கோரி அங்கு அமைதியாக இறையாண்மையை பேணி போராடி வந்த மக்களை உரிய தீர்வு பெற்றுத்தர முடியும் (பாரத நாட்டின் பிரதமர் ஸ்ரீ நரந்திர மோடியின் வருகையால்) போராட்டத்தை கைவிடுங்கள் என கோரி அந்த மக்களின் போராட்டத்தை கைவிடசெய்து அந்த மக்களின் காணிகளை கைவிடசெய்து நடுவீதியில் பசப்பு வார்த்தைகளை கூறி வாயை திறந்தாலே பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசும் முஸ்லிம் பெயர்தாங்கிய முனாபிக்குகள் சிலர் அந்த மக்களை கைவிட்டுச்சென்ற அவலத்துக்கு தீர்வு என்ன ??
மரியாதைக்குரிய கல கொட அத்தே ஜானசார தேரரை ஒளித்துவைத்துவிட்டு கள்ளன் பொலீஸ் விளையாடும் நல்லாட்சியின் மரியாத்தைக்குரிய 21 முஸ்லிம் ஜனாசாக்களும் இந்த பிரச்சினைகளை இப்போது மறந்து விட்டீர்கள் என நாங்கள் நினைக்க வில்லை !! சில முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வங்களை தீயிட்டு கொளுத்திய நல்ல மனிதர்களின் செயலுக்கான தண்டனையை இலங்கை காவல்துறை வழங்க்முன்வரும் என்பது எங்களது நம்பிக்கை ,
இலங்கை அரசின் படைகளுக்கு நிகராக பலம் கொண்ட ஆயுத படையுடன் தனது இனத்துக்காக போராடிய வே. பிரபாகரன் அவர்களின் ஆதிக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த பொலிஸ்,இராணுவம்,கடற்படை,விமானப் படை,உளவுப்படை , ஊர்காவல் படை, சிவில் பாதுகாப்பு படை கொண்ட நாட்டில் தனி ஒருமனிதனான அந்த தேரரை கைதுசெய்ய முடியாமல் இருக்கின்றது என்றால் அதனை நீங்கள் நம்பலாம், நாங்களும் நம்ப வேண்டும் என நினைப்பது உங்கள் முட்டாள் தனம்.
கொல்லிமலை சிலை இன்று ஆணிவேர் கொண்டுள்ளதை கொழும்பில் வாழும் அமைச்சர் அறியாமல் இருந்தாலும் அம்பாறையில் வாழும் மன்சூரும்,ஹரீசும்,பைசால் காஸிமும்,அறியாமல் இருப்பது ஆச்சரியமே !! கிழக்கின் தலைவராக இருக்கும் முதல் அமைச்சரின் ஆளுமை இந்த சிலை விடயத்தில் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பல தலைவர்களும்,மக்கள் பிரதிநிதிகளும் இருக்கும் இந்த அம்பாறையில் கொல்லிமலை சிலை விவகாரம் சவ்வுமுட்டாய் போன்று நீள்வது மாகாண சபை தேர்தல் மேடைக்காக என்பதை பாமர விவசாயிகளும் அறிவர்.
மயிலை நம்பி 33000 வாக்குகளை அள்ளிக்கொட்டிய அம்பாரை மக்களுக்கு வாக்குகளுக்கு பிரதி உபகாரமாக மயில் கட்சி வழங்கிய சேவை என்ன ? சில உயர்ந்த மனிதர்களின் கடனை அடைக்க திணைக்கள தலைவர் பதவிகளும், தையல் இயந்திரங்களையும் தவிர அக்கட்சி இப்படியான வாழ்வா அல்லது சாவா போராட்டங்களின் போது அமைதி காப்பது ஏன் ??
முசலி,வில்பத்து மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையாக வாக்குறுதியளித்த நீலக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான பைசர்முஸ்தபா, புறாவின் வன் என் ஒன்லி ஆசாத் சாலி,போன்றோர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினரா ??
கௌரவ மக்கள் காங்கிரசின் சத்திய தலைவரும் நல்லாட்சியின் நல்ல அமைச்சின் இளம் துடிப்புள்ள குட்டி அஸ்ரப் (போராளிகள் இப்படித்தான் அழைக்கிறார்கள்.) எனப்படும் ரிசாத் அமைச்சர் அவர்களே கைப்பையோடு வெளியான உங்களை செல்வத்தில் செழிப்பாக்கிய அந்த மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா ?? எத்தனையோ அழுத்தங்கள்,வாக்குறுதிகள் வந்தும் முடிக்காத போராட்டம் உங்கள் வாக்குறுதியை நம்பி கைவிடப்பட்டது என்பதில் உறுதியாக இருக்கும் நீங்கள் அந்த மக்களின் காணிப்பிரசசினைக்கு உரிய தீர்வை எப்போது பெற்றுக்கொடுக்க போகிறீர்கள் ??
பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் நீங்கள் உங்கள் உம்மத்தின் பிரச்சினைகளின் ஆழத்தை அறிந்து செயற்பட முன்வாருங்கள். இந்த பிரச்சினைகள் சுடச்சுட முடிக்கப்பட்ட வேண்டியவை ஆரிய கஞ்சி பழைய கஞ்சி என்பது போல இந்த பிரச்சினைகளை விட்டால் பின்னாளில் இந்த பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருமாறும் என்பதை அறிந்து செயலாற்ற முன்வரவேண்டும்.
இப்தார் மேசைகளில் ஒன்றாக அமர முடிந்த நம்மால் சமுக தீர்வுகளுக்கான பிரச்சினைகளுக்கும் ஒன்றாக அமர முடியும் என்பதை இந்த நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டி 21எம்.பிக்களும் ஒற்றுமையாக பயணித்து தீர்வை பெற்றுத்தாருங்கள்.